×

மதுரை தம்பதி டேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை: ஒரு நிமிடம்... 154 கிக்

மதுரை: ‘டேக்வாண்டோ’ என்ற கொரிய நாட்டு தற்காப்பு கலையில் மதுரையைச் சேர்ந்த இளம் தம்பதி ஒரு நிமிடத்தில் அடுத்தடுத்து 154 கிக் (உதை) விட்டு, கின்னஸ் சாதனை நிகழ்த்தினர். மதுரை, சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (30). மதுரை டேக்வாண்டோ அகாடமியின் தலைமை பயிற்சியாளர். இவரது மனைவி ஸ்ருதி (25). இந்த இளம் தம்பதி, தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் ஒரு நிமிடத்தில் 154 கிக் செய்து, கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தம்பதியாக இணைந்து இந்த டேக்வாண்டோவில் சாதனையை நிகழ்த்தியது இவர்கள் மட்டுமே என்பது
குறிப்பிடத்தக்கது.

நாராயணன் கூறும்போது, ‘‘கல்லூரியில் படிக்கும்போதே டேக்வாண்டோ கலையை கற்று பிளாக் பெல்ட் பெற்றேன். டேக்வாண்டோ விளையாட்டின் மீதுள்ள ஈடுபாட்டினால் வேலையை விட்டு விட்டு, மதுரையில் 2015ல் டேக்வாண்டோ பயிற்சி பள்ளியை தொடங்கி, பல நூறு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறேன். இதுவரை டேக்வாண்டோவில் 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளேன். சர்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களும் வென்றுள்ளேன்.

எனது மனைவி ஸ்ருதியும் டேக்வொண்டோவில் இருமுறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்காப்பு கலைகளில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் முதல் தம்பதியாக தேர்வாகியுள்ளோம். ஜன. 20 எங்களின் திருமண நாளில்தான், ஒரு நிமிடத்தில் 154 கிக் செய்து, கின்னசிற்கு அனுப்பி வைத்தோம். ஒரு நிமிடத்திற்குள் ஒருவர் மாற்றி ஒருவர் என முறையாக கிக் செய்து, இந்த குறுகிய நேரத்தை நிறைவு செய்தோம். இதற்கென 8 மாதங்கள் பயிற்சி எடுத்தோம். கின்னஸ் ஆய்வாளர்கள் தற்போது இச்சாதனை முயற்சியை தேர்ந்தெடுத்து, சான்று வழங்கியுள்ளர்’’ என்றார்.

இது கொரியன் கலை

கராத்தே போன்று அறியப்பட்ட இக்கலை கொரிய நாட்டுடையது. கொரியன் ராணுவத்தில் இந்த தற்காப்பு கலை துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், 80 சதவீதத்திற்கு கால்களை பயன்படுத்தியே சண்டையிட வேண்டும். 2000 முதல் ஒலிம்பிக்கிலும் இது இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து, பள்ளி விளையாட்டுகளிலும் இது இடம்பிடித்திருக்கிறது.

Tags : Madurai Couple , Madurai, Taekwondo, Guinness Adventure
× RELATED தேசபக்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் மதுரை தம்பதி