×

காட்பாடியில் தொடங்கி பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் குறைக்க ரூ.1,220 கோடியில் உயர்மட்ட சாலைகளை அமைக்க திட்ட மதிப்பீடு தயார்

வேலூர்: காட்பாடியில் தொடங்கி பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் குறைக்க ரூ.1,220 கோடியில் உயரமான தூண்களுடன் உயர்மட்ட சாலைகளை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நேஷனல் தியேட்டர் முதல் வேலப்பாடி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி கடந்த 2008ம் ஆண்டு நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தினாலும், அடிப்படை கட்டமைப்பு இன்னும் நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது. தற்போது தான் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டை அழகுப்படுத்தல், புதிய நவீன பஸ் நிலையம் கட்டுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை. இதனால் வேலூர் மாநகராட்சிக்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் சமீபத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கான வருவாய் குறைந்துள்ளது. தொழிற்சாலை இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.   அதன்படி, வேலூர் மாநகராட்சி பகுதியில் காட்பாடி முதல் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளதால், இந்த பகுதியில் மேம்பாலம் மற்றும் உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் ரூ.1,220 கோடியில் உயரமான தூண்களுடன் உயர்மட்ட சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
விரைவில் அதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை உயரதிகாரி கூறியதாவது: வேலூர் மாநகராட்சி ஆரம்ப பகுதியான காட்பாடியில் இருந்து வேலூர் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலமாக அமைக்க உள்ளனர். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை எண்234 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 207ன் வழியே நான்கு கட்டங்களாக உயர்மட்டச் சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.1,220 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக வேலூர் நேஷனல் தியேட்டர் முதல் வேலப்பாடி சந்திப்பு வரை 3.3 கி.மீ தூரத்துக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையானது நேஷனல் தியேட்டரில் துவங்கி சிஎம்சி, வேலூர் பழைய பஸ்நிலையம், ராஜா தியேட்டர் சந்திப்பு, முஸ்லிம் பள்ளி சந்திப்பு, பேபி ரெசிடன்ஸி சந்திப்பு வரை சென்று இடதுபுறமாக மாநகராட்சி கால்வாய் வழியாக சென்று வேலப்பாடி சந்திப்பினை அடையும். இதற்கு ரூ.350 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

2வது கட்டமாக காட்பாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் விருதம்பட்டு சந்திப்பு வரை 3.5 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையானது காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி காட்பாடி ரயில் நிலையம், பழைய சித்தூர் பஸ் நிலையம், ஓடை பிள்ளையார் கோயில் சந்திப்பு, சில்க்மில் சந்திப்பு வழியாக சென்று விருதம்பட்டு சந்திப்பினை அடையும். இந்த சாலைக்கு ரூ.370 கோடி கோரப்பட்டுள்ளது. 3வது கட்டமாக வேலப்பாடி சந்திப்பு முதல் பாகாயம் சிஎம்சி மனநல மருத்துவமனை வரை 2.8 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை வேலப்பாடி சந்திப்பில் துவங்கி சங்கரன் பாளையம், சாயிநாதபுரம், விருபாட்சிபுரம் ஓட்டேரி வழியாக பாகாயம் சிஎம்சி மனநல மருத்துவமனையினை அடையும். இதற்கு ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீட்டு செய்யப்பட்டுள்ளது. 4வது கட்டமாக பேபி ெரசிடன்சி சந்திப்பு முதல் தொரப்பாடி வரை 1.85 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சாலையானது பேபி ரெசிடன்ஸி சந்திப்பில் துவங்கி லட்சுமி தியேட்டர் சந்திப்பு, பழைய டோல்கேட் சந்திப்பு, கலெக்டர் பங்களா வழியாக தொரப்பாடி சந்திப்பினை அடையும். இதற்கு ரூ.200 கோடியும் கோரப்பட்டுள்ளது.

இந்த சாலையானது முதல் கட்டமாக அமைக்கப்பட உள்ள வேலூர் நேஷனல் தியேட்டர் முதல் வேலப்பாடி சந்திப்பு வரை செல்லும் சாலையுடன் இணைக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சியுடன் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார். தொடர்ந்து அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதிநிலை அறிக்கையில் வெளியாக வாய்ப்பு உள்ளது. மற்ற திட்டங்களை போல  இல்லாமல் இந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேற்ற அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Katpadi ,Bhaku ,roads , Wildlife, Beverage, Transport, High Road
× RELATED டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க...