×

அரசு, தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம்: பேருந்து மீது கற்கள் வீச்சு

பெங்களூரு: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மற்றும் தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தரவும், அரசு துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த முழு அடைப்புக்கு 700க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. வாடகைக் கார்கள், லாரிகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பகுதிகள், இன்று முழு அடைப்பு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக, இன்று நடக்கவிருந்த தேர்வை பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில், முழு அடைப்பை முன்னிட்டு கன்னட அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் ஆங்காங்கே திரண்டு ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் கடை உரிமையாளர்களிடம், கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி வலியுறுத்தினர். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. திருப்பதி-மங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து பாரங்கிபேட்டையில் சென்றபோது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Tags : blockade ,Karnataka ,companies ,government ,bandh ,Protesters ,CM ,Farangipet , Karnataka, bandh, Private Companies, Reservation
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...