×

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட TNPSC

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேருக்கு பதிலாக தகுதிவாய்ந்த நபர்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 19ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அண்மையில் அம்பலமானது. இதனையடுத்து முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்களுக்கு பதிலாக தகுதி வாய்ந்த நபர்களை சேர்ந்து புதிய தரவரிசை பட்டியலை டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தரவரிசை அடிப்படையில் தேர்வாகியுள்ள தேர்வர்கள் வரும் 18ம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதானவருக்கும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவுக்கும் தொடர்பு உள்ளதாக ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பத்துறை குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில் சிபிசிஐடி விசாரித்து வரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க திமுக எம்.பிக்கள் ஆர்.எஸ். பாரதி மற்றும் வில்சன் ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதியிடம், அப்பாவு மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும் அதனை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கவும் உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் தொடுத்துள்ள இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : TNPSC Group-4 ,TNPSC , TNPSC, Group-4, Selection, Abuse, New Rankings, TNPSC
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...