×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தீவிரம்: 10 பேரின் புகைப்படங்களை வைத்து ஆதார் ஆணையத்தின் உதவியை நாட சிபிசிஐடி போலீசார் திட்டம்!

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 10 பேரின் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக சிபிசிஐடி போலீசார் ஆதார் இணையதளத்தை அணுகியுள்ளனர். நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து யார் யாரெல்லாம் தேர்வு எழுதினார்களோ அவர்களின் புகைப்படத்தையும், கைரேகையையும் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் அனைவருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் இது தொடர்பான அறிவிப்பை அந்தெந்த காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த 10 பேருமே மருத்துவ மாணவர்களாக இருப்பார்கள். அல்லது இளநிலை, முதுநிலை படித்த மாணவர்களாக இருப்பார்கள் என்பதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் இருக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு இந்த புகைப்படங்கள் மற்றும் கைரேகையை அனுப்பி இதுபோன்ற மாணவர்கள் படித்து வருகிறார்களா? என்றும் சிபிசிஐடி போலீசார் கேட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தேசிய மருத்துவ குழுவின் நிறுவனத்திடமும் இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த 10 மாணவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மற்றும் மாநில குற்ற ஆவண காப்பகத்திலும் சோதனை மேற்கொண்ட போதும் கூட இதுபோன்ற நபர்கள் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. எனவே தான் ஆதார் அட்டையை தயாரிக்கும் உதய் எனப்படும் அந்த நிறுவனத்திடம் தற்போது சிபிசிஐடி உதவியை நாடியுள்ளது. அவர்களிடம் 10 பேரின் புகைப்படம் மற்றும் கைரேகையை அளித்து இதுபோன்ற நபர்கள் இந்தியாவில் எங்கேயும் இருக்கிறார்களா? என கேட்டு கொண்டுள்ளனர். விரைவில் இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் மட்டும் நடைபெற்ற முறைகேடானது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விலும் நடைபெற்றிருக்கின்றதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : CBCID ,Impersonation , Needle impersonation, photo of 10 people, Aadhaar Commission, Assistant, CBCID cops project!
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...