×

பல ஆயிரம் கோடிகளை குவிக்கும் வணிகமயமான காதலர் தினம்:அன்பை பகிறும் ரோஜா முதல் விமான டிக்கெட்டுகள் வரை சலுகை மையம்

சென்னை : காதலர் தினம் என்றதும் காதலிக்கும் இளசுகளை விட அவர்களை வைத்து கோடிகளை குவிக்க காத்திருக்கும் வணிக நிறுவனங்களுக்கு தான் கொண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. அன்பை பகிறும் ரோஜா முதல் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் அறை வரை அனைத்திலும் சலுகைகளை வாரி இறைத்து காதலர்களை திக்குமுக்கு ஆட செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் பிப்ரவரி 2வது வாரத்தை பெரும் வணிக கேந்திரமாக மாற்றி இருக்கின்றனர். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் தோன்றியது எப்படி ? மேற்கத்திய கலாச்சாரமான அதை எப்படி கடைபிடிக்கலாம் என்ற சர்ச்சைகளும் போராட்டங்களும் ஒருபுறம் வழக்கம் போல தொடருகின்றன.

பிப்ரவரி 2வது வாரமே காதலர் தின வாரம்

மறுபுறம் இதனையெல்லாம் பொருட்படுத்தாது பன்னாட்டு வணிக நிறுவனங்கள், காதலர் தினத்தை வெறும் வணிக தலமாக மாற்றி இருக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு தங்களது வியாபாரத் திட்டத்தை வணிக நிறுவனங்கள் விரிவுப்படுத்தியன் எதிரொலியாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் மட்டும் 21 பில்லியன் டாலர்களை தொட்டு இருக்கிறது காதலர் தின வணிகம். இந்தியாவிலும் காதலர் தின மோகத்தில் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து புதுப்புது யுக்திகளை பெரு நிறுவனங்கள் கையாண்டு வருகின்றனர்.இதன்படி பிப்ரவரி 2வது வாரத்தையே காதலர் தின வாரம் என்று அவர்கள் பிரகனப்படுத்தி இருக்கிறார்கள்.

காதலர் தினம் பெரு வணிகத்தின் அடையாளமாக மாற்றம்

பிப்ரவரி 7ம் தேதியை ரோஜா தினம், 8ம் தேதி முன்மொழிவு தினம், 9ம் தேதி சாக்லேட் தினம் மற்றும் 10ம் தேதி டெடி பியர் தினம் என மாற்றி இருக்கின்றனர். இந்த ஒவ்வொரு தினத்தின் பெயரில் இருந்தே அதன் பின்னணியில் இருக்கும் பொருட்களின் விற்பனையை யூகித்து விட முடியும்.இதே போல காதலர் தின வாரத்தில் எஞ்சியிருக்கும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான நாட்களும் சில பெயர்களை கூறுகிறார்கள். அவை கொஞ்சம் எல்லை மீறல் சங்கதிகள் என்றும் விமர்சிக்கப்படும் அளவுக்கு இருக்கின்றன.

இப்படி பிப்ரவரி 14ம் தேதி ஒற்றை நாளாக இருந்த காதலர் தினக் கொண்டாட்டத்தை ஒரு வாரமாக முழுவதும் மாற்றி தங்களது இலக்கின் எல்லையை பன்னாட்டு நிறுவனங்கள் விரிவுப்படுத்தி இருக்கின்றன. இதனால் காதலர் தினத்திற்கு ரோஜா, வாழ்த்து அட்டை, டெட்டி பியர், பரிசுப் பொருட்கள் நிறுவனங்கள் மட்டுமே பெருமளவில் வணிகம் ஈட்டிய நிலைமை மாறி இருக்கிறது.

விமானம், ஹோட்டல், மது, உணவு என அனைத்திலும் சலுகை

உள்ளூரிலேயே காதலர் தினம் கொண்டாடினால் எப்படி, விமானத்தில் பறந்து வெளியூருக்கு செல்லுங்கள் என்று விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை சலுகை விலையில் கூவி கூவி விற்கத் தொடங்கிவிட்டனர். ஏர் ஏஷியா நிறுவனம் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை ரூ.1,014க்கு தருகின்றன. இதே போல குறிப்பிட்ட வழித் தடங்களில் ரூ. 800 முதல் சில விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை வழங்குகின்றனர். விமானத்தின் வந்துவிட்டால் போதுமா, ஹோட்டல் அறைகளுக்கு 30 முதல் 50% வரை நாங்கள் தள்ளுபடி தருகிறோம் என்று பல நிறுவனங்கள் சலுகை விலையை விரித்து காத்திருக்கின்றனர்.

அது மட்டுமா, மதுவகைகள், உணவுகளுக்கு போட்டிப் போட்டு புது புது மெனுக்களை உருவாக்கி டிஸ்கவுண்ட் சலுகைகளையும் முன்னணி ஹோட்டல்கள் அறிவிக்கின்றனர்.  விமானம், ஹோட்டல், மது, உணவு என இவர்கள் சலுகைகளை அளிக்கும் வகையார்களை பார்க்கும் போது காதலர் தினத்தை ஒரு மார்க்கமான பாதைக்கு கொண்டு சென்றுவிட்டனரா எந்த சந்தேகம் எழுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மொத்தத்தில் அன்பின் அடையாளமாக சொல்லப்படும் காதலர் தினம் இன்று பெரு வணிகத்தின் அடையாளமாக மாற்றப்பட்டு உள்ளது என்றால் அது மிகையல்ல.  


Tags : Airline ticket, offer, valentines day, plane, hotel, wine, food, rose
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை