×

ஸ்ரீபெரும்புதூரில் 4,000 கோடி முதலீட்டில் சியட் நிறுவன ரேடியல் டயர் உற்பத்தி தொழிற்சாலை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் 4,000 கோடி முதலீட்டில் சியட் நிறுவனம் சார்பில் ரேடியல் டயர் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம், கண்ணன்தாங்கல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனம் சார்பில் அதிநவீன ரேடியல் டயர் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து பேசியதாவது: இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018 ஜூலை 5ம் தேதி எனது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாதங்களில், உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான 4,000 கோடியில், முதல்கட்டமாக, 1,400 கோடி முதலீடு செய்து, இன்று முழு அளவிலான வணிக உற்பத்தியை துவக்கியுள்ளது சியட் நிறுவனம். மிக விரைவாக செயல்பட்டு, தனது உற்பத்தியை துவக்கியுள்ள சியட் நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு, டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. அப்பல்லோ, ஜே.கே., மிஷ்லின், எம்.ஆர்.எப்., டி.வி.எஸ். யோகோ ஹாமா என திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை, பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழ்நாட்டில்தான் மேற்கொள்ளப்படுகிறது.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்திகளில் ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடுதான். சில மாநிலங்கள் சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னிலை வகிக்கின்றன. சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என துறைகள்தோறும் சிறப்பிடம் பெற்று, அனைவருக்குமான வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்யும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. சியட் நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலையை துவங்கியதை போல, விரைவில் தனது ஆராய்ச்சி பிரிவையும் சென்னையில் துவங்கிட வேண்டும். இந்த தொழிற்சாலையில் இருந்து நாள் ஒன்றுக்கு 30,000 கார் டயர் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோன்று இந்த நிறுவனத்தில் 40 சதவீதம் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்று சொன்னார்கள். அது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், சியட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : CEAT ,tire manufacturing plant ,Sriperumbudur , CEAT radial tire, manufacturing plant,Sriperumbudur
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...