×

கட்டிடங்களின் மதிப்பை நிர்ணயிப்பதில் சார்பதிவாளர்கள் முறைகேடு பதிவுத்துறைக்கு 1000 கோடி இழப்பு?

* விசாரணை நடத்த ஐஜி உத்தரவு
* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல கோடி மதிப்பிலான கட்டிடங்களின் மதிப்பை 50 லட்சத்துக்கு கீழ் மதிப்பு நிர்ணயம் செய்ததில் பதிவுத்துறைக்கு 1000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக பதிவு செய்யும் போது கட்டிடங்களுக்கு, நிலங்களுக்கு தனித்தனியாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டிடங்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை தயாரித்துள்ள விலைப்பட்டியலின் அடிப்படையில் இந்த கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் மாநிலத்தில் 2 உதவி பொறியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் தான் 25 லட்சத்துக்கும் மேல் சொத்து மதிப்பு இருந்தால் அவர்கள் தான் கட்டிடங்களை அளவீடு செய்து மதிப்பு நிர்ணயித்து வந்தனர். ஆனால், கட்டிடங்களை அளவீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி 50 லட்சம் வரை கட்டிட மதிப்பை சார்பதிவாளர்கள் ஆய்வு செய்து, கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கி பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டார். இதை பயன்படுத்தி கொண்டு சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பல இடங்களில் கட்டிடங்களின் மதிப்பை சரியாக நிர்ணயிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகங்களில் கட்டிடங்களை ஆய்வு செய்யும் போது லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு கட்டிடத்தின் மதிப்பை குறைத்து அதற்கேற்ப கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணத்தில் சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1.50 கோடி மதிப்பிலான சொத்து மதிப்பை, 50 லட்சத்துக்கு கீழ் குறைவாக பதிவு செய்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தமான 4.50 கோடி மதிப்பிலான கட்டிடத்தின் மதிப்பை ₹50 லட்சத்துக்கு குறைத்து பத்திரம் பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில், அயோத்தியா பட்டிணத்தில் மதிப்பு குறைத்து பதிவு செய்த சார்பதிவாளரிடம் இழப்பை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. அதே போன்று கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலரிடம் இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதில், கட்டிடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ததில் 55 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக, லட்சக்கணக்கில் சார்பதிவாளருக்கு பணம் கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு, வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களின் சொத்து மதிப்பை குறைத்து பத்திரம் பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், சார்பதிவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பதிவுத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில் ‘ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் கட்டிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு சரிதானா என்பது தொடர்பாக அறியும் வகையில் அது தொடர்பான அறிக்கையை ஐஜி கேட்டுள்ளார். மேலும், மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை நேரில் மறு ஆய்வு செய்கின்றனர். இதில், மதிப்பீட்டில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அவர்களிடம் இழப்பீடு தொகையை வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : buildings ,Registrar of Regulators ,Regulators , 1000 crore loss ,Registrar of Regulators ,determining , value of buildings?
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...