×

பல கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரம் ஏஜிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி ஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் ‘பிகில்’ படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது படத்திற்கான வரவு செலவு கணக்குகள் குறித்து நேரடியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடிகர் விஜய் நடித்து வெளிவந்த ‘பிகில்’ படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. ஆனால் வருமான வரித்துறைக்கு திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் சரியாக கணக்கு காட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சென்னையில் நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம், பைனான்சியரும் அதிமுக பிரமுகருமான அன்புச்செழியன், விநியோகஸ்தர் சுந்தர் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் கடந்த வாரம் 38 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர். 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில், பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் இருந்து, கணக்கில் வராத 77 கோடி ரொக்கம், ஒரு கோடி அளவுக்கு இரண்டு பைகள் நிறைய தங்க, வைர நகைகள் மற்றும் ₹300 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய்க்கு ஏஜிஎஸ் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி, திரைப்படத்தை விநியோக உரிமம் ெபற்ற ‘ஸ்கிரீன் கிரீன்’ உரிமையாளர் சுந்தர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் பைனான்சியர் அன்புச்செழியன் சார்பில் அவரது ஆடிட்டர் மற்றும் நடிகர் விஜய் சார்பில் அவரது ஆடிட்டர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைதொடர்ந்து ஏஜிஎஸ் திரைப்பட குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் 2 நிர்வாகிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை கேட்ட ஆவணங்களுடன் ேநற்று காலை ஆஜராகினர்.

அவர்களிடம் திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும், 300 கோடி அளவிற்கு ‘பிகில்’ படத்தின் கணக்குகள் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஏஜிஎஸ் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வரி ஏய்ப்பு கணக்கிடும் பணி நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Archana Kalpathi ,AGS , AGS Managing Director Archana Kalpathi, IT office
× RELATED ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி