×

ரஜினியுடன் கூட்டணி விவகாரம் ராமதாஸ் திடீர் அந்தர் பல்டி

சென்னை: ரஜினி கட்சி தொடங்கினால் யோசிக்கலாம் என்று கூறிய ஒரே நாளில் பாமக, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது என்று கூறி ராமதாஸ் மீண்டும் அந்தர் பல்டி அடித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழக அரசியலில் வரும் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினி கட்சி தொடங்குவாரா என்ற கேள்விக்கு நீண்ட காலமாக விடை கிடைக்காமல் உள்ளது. அவர் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் அவரது அரசியல் ஆலோசகராக இருக்கக்கூடிய தமிழருவி மணியன், வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சி தொடங்கி பிரமாண்ட மாநாடு நடத்துவார் என்று கூறி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு அவர் விடவில்லை. ரஜினி தொடங்கும் கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூட்டைக் கிளப்பியது. தமிழருவி மணியனின் பேச்சு குறித்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில், இதுகுறித்த கேள்விகளுக்கு சென்னையில் ராமதாஸ் பதில் அளித்தார்.  

அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின்னர் இதுகுறித்து கேட்டால் பதிலளிக்கிறேன் என்றார். தமிழருவி மணியன் கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. இவ்வளவு காலம் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளீர்கள், அவர் கட்சி தொடங்கினால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். அதன்பின்னர் அதுகுறித்து யோசிக்கலாம்’ என்றார். அதிமுக கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், நேரடியாக பதில் சொல்லாமல், மழுப்பலான பதிலை கூறியதும், கட்சி தொடங்கினால் யோசிக்கலாம் என்றும் கூறியதும் தமிழக அரசியல் அரங்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவாதங்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அனல் பறக்கும் நிலையில், ‘ரஜினி பற்றிய கேள்விக்கு என்னிடம் இடமில்லை. அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு பின்பும் தொடரும்’ என்று கூறி ராமதாஸ் அந்தர் பல்டி அடித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கினால் யோசிக்கலாம் என்று கூறிய ஒரே நாளில், அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் என்று அவர் கூறியுள்ளது அதிமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : affair ,Rajini Rajini ,Alliance , Alliance affair,Rajini
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர...