×

கருணை அடிப்படையில் வாரிசு வேலை யாருக்கு? : புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

* கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்றவர்களை விதிகளின் படி ஓராண்டிற்குள் பணி வரன்முறை செய்ய வேண்டும்.
* இட ஒதுக்கீடு விதிகள் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு பொருந்தாது.


சென்னை : தமிழக அரசு உயர் நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குவது தொடர்பாக வரிவான வழிகாட்டுதல்களை வகுத்து தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது : பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுகள், இயலாமையால் 53 வயது வயதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வாரிசுகள், மறைந்த ராணுவத்தினரின் வாரிசுகள், நீதிமன்றத்தால் காணாமல் போனவர் என்ற அறிவிக்கப்பட்ட அரசு ஊழியரின் வாரிசுகள், இடைநீக்கம் ெசய்யப்பட்ட பிறகு வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் ஆகியோர் கருணை அடிப்படையில் பணி பெற தகுதியுடையவர்கள். அரசு துறைகளின் தற்காலிக, தினக் கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களின் வாரிசுகள் மற்றும் முழு நேர ஊதிய விகிதத்தில் பணியாற்றாத அரசு ஊழியர்களின் வாரிசுகள் கருணை பணி பெற விண்ணப்பிக்க முடியாது. இறந்த அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மகன், மகள், சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட மகன் மற்றும் மகள், விவாகரத்து பெற்ற மகள், விதவையாக உள்ள மற்றும் கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு கருணை பணி கோரி விண்ணப்பிக்கலாம். திருமணம் ஆகாத அரசு ஊழியரின் தந்தை, தாய், திருமணம் ஆகாத சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரும் கருணை பணிக்கோரி விண்ணப்பிக்கலாம்.

ஒரு அரசு ஊழியர் மரணம் அடைந்த தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக மரணமடைந்த அரசு ஊழியரின் மனைவி மற்றும்  கணவனாக இருப்பின் அவருக்கு 50 வயதும், மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு 40 வயது வரை இருக்கலாம். மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசு ஒருவர் கருணை பணிக்கு விண்ணப்பித்த பின்பு மரணமடைந்து விட்டால் அடுத்த சட்டபூர்வ வாரிசின் விண்ணப்பத்தை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்யலாம். மரணமடைந்த அரசு ஊழியர் கடைசியாக பணிபுரிந்து அலுவலகத்தில் கருணை வேலை தொடர்பான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இதன்பிறகு அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரி இறப்பு, குடும்பத்தின் நிலை, விண்ணப்பித்தவரின் கல்வித் தகுதி ஆகியவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பம் கிடைத்த ஒரு மாதத்தில் விண்ணப்பம், அதன் மீதான் அறிக்கை, காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்பாக சம்பந்தபட்ட துறையின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதை துறையின் தலைமை அதிகாரி அதை முழுமையாக ஆய்வு அங்கு காலியிடம் இருந்தால் அறிக்கை கிடைத்த 15 நாட்களுக்குள் பணி ஆணை வழங்க வேண்டும். இந்த பணிக்காக மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்டத்தில் மரணமடைந்த அரசு ஊழியர்களின் விவரம் தொடர்பாக சிறப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக அறிக்கை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் சமர்பிக்க வேண்டும். துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பணி அதிகாரிகளும் இந்த விதிகளுக்கு உட்பட்டு பணி கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Heir work in grace,Release, New Guidelines
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...