×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குற்றவாளி ஓம் காந்தன் கார் ஓட்டுநர் கைது

* ஜெயகுமார் கார் பழுதானதால் விடைத்தாள்கள் வேறு காருக்கு மாற்றம்
* ஓட்டல்களில் தங்கி ஓஎம்ஆர் தாள் திருத்தம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில், இடைத்தரகர் ஜெயகுமார் கார் பழுதானதால் அவரது காரில் இருந்து விடைத்தாள்களை மாற்றி கொண்டு செல்ல உதவிய முக்கிய குற்றவாளி ஓம் காந்தனின் கார் ஓட்டுநரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம் காந்தனை கடந்த 6ம் தேதி முதல் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஓம் காந்தனுக்கு அனைத்து வகையிலும் உடந்தையாக இருந்த சென்னை வண்ணாரப்பேட்டையை ேசர்ந்த அவரது கார் ஓட்டுநர் மரியலிஜோஸ்குமார்(32) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் மரியலிஜோஸ்குமார் அளித்த வாக்குமூலம் வருமாறு: குரூப் 4 தேர்வு நடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ராமேஸ்வரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து அன்று இரவு 8 மணிக்கு விடைத்தாள்கள் ஏபிடி பார்சல் சர்வீஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்று இரவு சிவகங்கை தாண்டியதும், டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம் காந்தன் மற்றும் இடைத்தரகர் திட்டத்தின் படி நான் ஓம் காந்தனின் மாருதி ஸ்விப்ட் காரை ராமேஸ்வரத்திற்கு எடுத்து சென்றேன்.

அப்போது விடைத்தாள்கள் ஏற்றி வந்த ஏபிடி பார்சல் வாகனத்தை உணவு சாப்பிடுவதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தினர். அப்போது, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களின் விடைத்தாள் பண்டல்களை அவசர அவசரமாக இடைத்தரகர் ஜெயகுமாருடன் சேர்ந்து இனோவா காரில் நானும் ஏற்றினேன். பிறகு விடைத்தாள் திருத்தும் ஜெயகுமார் இனோவா காருக்கு முன்பு பாதுகாப்புக்காக ஓம் காந்தனின் காரை நான் தான் ஓட்டிச் சென்றேன். பாதி வழியில் திடீரென ஜெயகுமாரின் இனோவா கார் பழுதானது. உடனே ஓம் காந்தனின் ஸ்விப்ட் காரில் ஜெயகுமார் காரில் இருந்த விடைத்தாள்களை மாற்றி ஏற்றி கொண்டு பார்சல் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றோம். காரை நான் தான் ஓட்டினேன். பிறகு செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அதிகாலை 5.30 மணிக்கு திருத்தப்பட்ட இரண்டு மையங்களின் விடைத்தாள்களை திட்டமிட்டப்படி ஏபிடி பார்சல் சர்வீஸ் வாகனத்தில் ஏற்றினோம். இதுதவிர ஓம் காந்தன் கார் ஓட்டுனர் என்பதால் அனைத்து மோசடிக்கு நான் பல வகையில் அவருக்கு உடந்தையாக இருந்து உள்ளேன். இடைத்தரகர்களிடம் பணத்தை நான் காரில் சென்று வசூலித்து ஓம் காந்தனிடம் கொடுத்து வந்தேன். கடந்த 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டிற்கும் நான் பல வகையில் உதவியாக இருந்துள்ளேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : Om Khandan ,car driver ,TNPSC , TNPSC , guilty, exam abuse
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...