×

வரலாற்று தகவல்களை புத்தகங்களிலிருந்து நீக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? : அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்தன’ என பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை நீக்க என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது  என்று தெரிவிக்குமாறு  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ‘இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை’ இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்க வேண்டும் எனக்கோரி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திரசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் தனி நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை பெரியார் திராவிட கழக துணை தலைவர் வக்கீல் துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில், வரலாற்று உண்மையை மறைக்கும் வகையில் பாட புத்தகத்தில் உள்ள கருத்தை மாநில கல்வித்துறை சட்டவிரோதமாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. பாடப்புத்தகத்தை ஒருங்கிணைத்த நிபுணர் குழுவிடம் முறையான அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பாடப்புத்தகத்தில் உள்ள கருத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாற்று உண்மை என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது  என்று மனுதாரர் தரப்பு வக்கீல் இளங்கோவன் வாதிட்டார்.இதைக்கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் நாஜிப்படை, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்று உண்மைகளை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோல்தான் மனுதாரர் குறிப்பிடும் பதிவையும் மறைக்க முடியாது. ஏற்கனவே கல்வியாளர்களால் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் உள்ள இதுபோன்ற வரலாற்று தகவல்களை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Procedure,remove historical information, Government Response Highcourt Directive
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...