×

மகளிர் முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியா சாம்பியன்: பைனலில் இந்தியா ஏமாற்றம்

மெல்போர்ன்: மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இந்த தொடரில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதின. லீக் சுற்றின் முடிவில் 3 அணிகளுமே தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததால், மொத்த ரன்  ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா பைனலுக்கு முன்னேறின. இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட்டது.இந்த நிலையில், ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த பைனலில் இந்தியா -  ஆஸ்திரேலியா மோதின. டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை பெத் மூனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 71 ரன் (54 பந்து, 9 பவுண்டரி) விளாசினார். ஆஷ்லி கார்ட்னர், கேப்டன் மெக் லான்னிங் தலா 26 ரன், ரச்சேல் ஹேய்ன்ஸ் 18 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா,  ராஜேஸ்வரி கெயிக்வாட் தலா 2, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆஸி. வீராங்கனைகளின் துல்லியமான  பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா 20 ஓவரில் 144 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 66 ரன் (37 பந்து, 12 பவுண்டரி) விளாசினார். ரிச்சா கோஷ் 17, கேப்டன்  ஹர்மான்பிரீத் கவுர் 14, டானியா பாட்டியா 11, ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா தலா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் ஜெஸ் ஜோனஸன் 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். டேலா விளேமிங்க் 2, எல்லிஸ் பெர்ரி, மேகான் ஷுட், அன்னாபெல் ச்தர்லேண்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 29  ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸி. அணி 11 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனஸன் இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனை விருதும்,  பெத் மூனி தொடர் நாயகி விருதும் பெற்றனர். 


Tags : Women ,Tripartite T20 Series Australia Champion ,final ,India , Women's Trilingual T20 Series, Australia, Champion, India
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...