×

தாம்பரத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் மாணவ, மாணவிகள்

தாம்பரம்: தாம்பரம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், மார்க்கெட், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், திரையரங்கங்கள் என ஏராளமாக உள்ளன. எனவே தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து மார்க்கெட் பகுதி, காவல் நிலையம், திரையரங்கங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம் என பல இடங்களுக்கு வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கிழக்கு, மேற்கு தாம்பரத்தை இணைக்கும் பகுதியில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல, எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள கார் மற்றும் இருசக்கர வாகனம் செல்லும் சுரங்க பாலம் வழியாக கணபதிபுரம் உள்ளிட்ட கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தி வந்தனர்.

இவ்வாறு கடக்கும்போது பெரும்பாலானோர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவம் ஏற்பட்டது. எனவே கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு பொதுமக்கள் நடந்து சென்றுவர வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை அடுத்து ஏற்கனவே  உள்ள  வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதையின் அருகே 3 கோடியே 20 லட்சம் செலவில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்த நடைபாதையில் தண்டவாளத்தின் இருபுறமும் மதில் சுவர்கள் கட்டப்படாமல் உள்ளதால் சுரங்க நடைபாதையில் செல்லாமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து மறு பகுதிக்கு செல்கின்றனர். இவ்வாறு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது ரயில்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் இணைக்கும் பகுதியை பொதுமக்கள் கடந்து செல்ல சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக இல்லை.
இதனால் எதற்கு சுரங்க நடை பாதையை பயன்படுத்த ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்? என யோசிக்கும் பொதுமக்கள் நேரடியாக தண்டவாளத்தை கடந்து மறு பகுதிக்கு செல்கின்றனர். மேலும் சிலர் சுரங்க நடைபாதையில் இருந்து வெளியே வரும்போது ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருவதை தவிர்க்க ஜிஎஸ்டி சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஏறி குதித்து செல்கின்றனர். இவ்வாறு செல்லும் போது அவர்கள் ரயில் மற்றும் சாலைகளில் செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே சுரங்கப் பாதையில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து மறுபுறம் வரை செல்ல ஜிஎஸ்டி சாலையின் நடுவே ஒரு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Tambaram, dandavalam, student, students
× RELATED நாகை மாவட்டம் சீர்காழி அருகே தண்டவாளத்தில் விரிசல்