×

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடு தொடரக்கூடாது: அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என ராமதாஸ் பேட்டி

சென்னை: தமிழக அரசின் இந்த நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டம் குறித்து பாமக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்கான நிழல் நிதி அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு வெளியிட்டார். கட்சி தலைவர் ஜி.கே,மணி, மாநில இணைபொதுச் செயலாளர் ஏ.கேமூர்த்தி, பொருளாளர் திலகபாமா, புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

நிழல்நிதி அறிக்கை தமிழக மக்களின் வளர்ச்சிக்கானது. தமிழக சட்டமன்றத்தில் முன் வைக்கக் கூடிய மக்களின் கோரிக்கையாக வெளியிட்டுள்ளோம். இதில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரம், தகவல்கள் பட்ஜெட் தயாரிக்க அரசுக்கு உதவியாக இருக்கும். இதில் 434 யோசனைகளை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். நிதிநிழல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பாக யார் யாரை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளோம். இதை இந்த அரசு செயல்படுத்த வேண்டும். பட்ஜெட்டுக்கு திட்டமிடல் என்பது கிராம சபையில் இருந்து தொடங்க வேண்டும். சமூகத்தில் பாதிக்கு மேல் பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக ஒரு பட்ஜெட் போட வேண்டும். அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் 10 அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் வெளிப்படை தன்மை இல்லை. இப்போது நடந்துள்ள ஊழல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் தவறுகள் நடக்க கூடாது. இந்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் இதில் அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் குறித்து நிருபர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,‘‘ ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். இது உள்ளாட்சி தேர்தலில் தொடரும், அதற்கு பின்பும் தொடரும். எனவே ரஜினி பற்றிய கேள்விக்கு இடமில்லை’’ என்றார்.

Tags : Ramadas ,DNPSC ,Alliance ,DMK , DNPSC Examination, No longer Abuse, Proceedings
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...