×

66ல் போட்டியிட்டு 63ல் டெபாசிட் காலி தலைநகரில் அடையாளம் இழக்கும் காங்கிரஸ்: வரலாறு காணாத அளவுக்கு வாக்கு சதவீதமும் சரிவு

புதுடெல்லி: நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், தலைநகரில் தனது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது. அரசியல் சதுரங்கத்தில் மிக முக்கிய கட்டமாக தலைநகர் டெல்லி திகழ்கிறது. டெல்லி சட்டப்பேரவையில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட தேசிய கட்சிகள் எப்போதும் தீவிர முயற்சி மேற்கொள்ளும். அந்தவகையில், கடந்த 2013ம் ஆண்டு வரை தலைநகர் டெல்லி காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஷீலா தீட்சித் தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தது. அதன்பின் டெல்லியில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.

டெல்லி அரசியலில் ஆம் ஆத்மி வரவால், காங்கிரஸ் சுருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி 66 இடங்களில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியை கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை.
ஆம் ஆத்மி 62 இடங்களையும், பாஜ 8 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் வேட்பாளர்கள் 66ல் 63 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தனர். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் ஜமியா பல்கலை வன்முறை சம்பவங்களால் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருமே டெபாசிட் இழந்துள்ளனர்.

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 4 பேரணிகளில் பங்கேற்றார். பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால், எதுவும் டெல்லி வாக்காளர்களைக் கவரவில்லை. ராகுல், பிரியங்கா பிரசாரம் செய்த அனைத்து இடங்களிலும் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை பறி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, முதுபெரும் கட்சியான காங்கிரஸ் டெல்லியில் தனது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது. காங்கிரசின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

அதோடு, அக்கட்சியின் வாக்கு சதவீதமும் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2013ல் ஆளும் கட்சியாக தேர்தலை சந்தித்து தோற்ற போது காங்கிரஸ் 24.55 சதவீத வாக்குகளை பெற்றது. இது கடந்த 2015ல் 9.7 சதவீதமாக சரிந்தது. தற்போது வரலாறு காணாத சரிவாக 4.26 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா பதவி விலகி உள்ளார். ஏற்கனவே பீகார், மேற்கு வங்கம், ஒடிசாவில் காங்கிரஸ் தனது ஆதிக்கத்தை இழந்துள்ளது.

கோட்டையாக இருந்த இந்த மாநிலங்கள் பிராந்தியக் கட்சிகளின் எழுச்சியால் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்போது டெல்லியும் அதன் கையைவிட்டு போயுள்ளது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாஜவை தோற்கடித்த ஆம் ஆத்மியை பாராட்டி கட்சிக்குள்ளேயே கண்டனத்தை சம்பாதித்து வருகின்றனர். எனவே, ‘காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து, செயலில் களமிறங்க வேண்டிய நேரம் இது. கட்சியில் உள்ள குளறுபடிகளை களைந்து வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி தலைமை அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’ என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். பி.சி.சாக்கோ ராஜினாமா: இதற்கிடையே, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததற்கு பொறுப்பேற்று டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை பிசி சாக்கோ நேற்று ராஜினாமா செய்தார்.

* பிரணாப் முகர்ஜியின் மகள் ப.சிதம்பரத்துக்கு செமடோஸ்
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வென்றதும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், ‘ஆம் ஆத்மி வென்றுள்ளது. பாஜ.வின் வெறுப்பு, வன்முறை தோற்றுள்ளது. டெல்லி மக்களுக்கு பாராட்டுக்கள். அடுத்ததாக தேர்தல் நடக்கும் மாநிலத்திற்கு முன்னுதாரணமாகி விட்டீர்கள்,’ என ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பதிவிட்டார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘பாஜ.வை தோற்கடிக்கும் பணியை மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் கொடுத்து விட்டதா? இல்லை என்றால், நமது தோல்விக்கான காரணத்தை ஆராய்வதை விட்டு விட்டு, எதற்காக ஆம் ஆத்மிக்கு வாழ்த்து கூறுகிறீர்கள்? ஆம் என்றால், பேசாமல் டெல்லி காங்கிரஸ் கமிட்டியை இழுத்து மூடி விடலாமே. சுயபரிசோதனை செய்தது எல்லாம் போதும். இது களத்தில் இறங்கி செயல்பட வேண்டிய நேரம். தலைமை முடிவெடுப்பதில் தாமதம், யுக்தி இல்லாதது, மாநில அளவில் ஒருங்கிணைப்பில்லை, தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்தல் போன்றவையே நம் தோல்விக்கு காரணம். பாஜ பிரித்தாளும் அரசியல் செய்தது, கெஜ்ரிவால் புத்திச்சாலி அரசியல் செய்தார், நாம் என்ன செய்தோம்? உண்மையிலேயே நாம் என்ன செய்தோம் என்பதை கூற முடியுமா?’ என விளாசி உள்ளார்.

* பழிபோடும் படலம் ஆரம்பம்
தோல்விக்கான காரணம் குறித்து, காங்கிரசுக்குள் அடுத்தவர் மீது பழிபோடும் படலம் ஆரம்பித்து விட்டது. டெல்லி முன்னாள் முதல்வரான மறைந்த ஷீலா தீட்சித் போன்ற தலைவர்கள் இல்லாததே வீழ்ச்சிக்கு காரணம் என டெல்லி காங்கிரஸ் கமிட்டியில் ஒரு தரப்பினரும், அதெல்லாம் கிடையாது என்று மற்றொரு தரப்பினரும் பேசத் தொடங்கி உள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டெல்லி பொறுப்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில், ‘‘ஷீலா தீட்சித் இல்லாததே வீழ்ச்சிக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது. அவர் முதல்வராக இருந்த 2013ல் தான் கட்சியின் தோல்வியே தொடங்கியது. அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி, ஒட்டு மொத்த காங்கிரஸ் வாக்கு வங்கியை பறித்துக் கொண்டது,’’ என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மற்றொரு தலைவர் மிலிந்த் தியோரா, ‘‘புள்ளி விவரங்களை பாருங்கள். 2013ல் காங்கிரஸ் தோற்ற போது பெற்ற வாக்குகள் 24.55 சதவீதம். பின்னர் 2015 சட்டப்பேரவை தேர்தலில் ஷீலா தீட்சித் பங்கேற்கவில்லை. அப்போது, வாக்கு சதவீதம் 9.7 ஆக சரிந்தது. 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் அவர் பொறுப்பேற்ற போது கட்சியின் வாக்கு சதவீதம் 22.46 ஆக அதிகரித்தது. இப்போது 4.26 ஆக சரிந்துள்ளது’’ என்றார். ‘‘பாஜவின் பிரித்தாளும் அரசியலும், ஆம் ஆத்மியின் வளர்ச்சி அரசியலும் சேர்ந்து எங்களின் அடையாள அரசியலை வெற்றி கொண்டு விட்டன,’’ என மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார்.

Tags : Congress ,capital city , Contest in 66, Deposit vacancy in 63, Capital, Lost, Congress, History, Vote percentage, Decline
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...