×

பிப். 24, 25ம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வருகை: ‘ஹவுடி மோடி’ போன்று டிரம்புக்கு ‘கெம் சோ’...களைகட்டும் குஜராத்தின் அகமதாபாத் நகரம்

அகமதாபாத்: வரும் 24, 25ம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில் அமெரிக்காவில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை போன்று டிரம்புக்கு  ‘கெம் சோ’ நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. அதனால், குஜராத்தின் அகமதாபாத் நகரை அழகுபடுத்தும் பணியில் அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  மனைவி மெலனியாவுடன் வரும் 24, 25ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். பிரதமர்  மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில்  பங்கேற்கிறார்.

இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், சாலைகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.  உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம்  என்று  அழைக்கப்படும் மொடாரா ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.10 லட்சம் பேர் அமர்வதற்கான வசதிகள் இந்த  அரங்கில்  உள்ளது. ஸ்டேடியத்தைச் சுற்றி, சாலைகள் போடப்பட்டு, தரைவிரிப்பு வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. ரயில்களுக்கு பெயின்ட் அடிக்கப்படுகிறது.  நடைபாதைகளில் புதிய பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் டெக்சாஸில் பிரதமர் மோடி பங்கேற்ற ‘ஹவுடி  மோடி’ நிகழ்ச்சியை போன்று ஒரு நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப். 24ம் தேதி மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வின் தலைப்பாக ‘கெம் சோ  மிஸ்டர் பிரசிடென்ட்’ என்று கூறப்படுகிறது.

‘கெம் சோ’ (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்) என்பது குஜராத்தியில் ஹவுடிக்கு சமமானதாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வரும் 24ம் தேதி  அதிகாலையில் அதிபர் டிரம்ப், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார். குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டெல்லிக்கு  டிரம்ப் செல்கிறார். அப்போது, இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சுமார் 27 கோடி ரூபாய் செலவில் 2 கி.மீ சுற்றளவில் 13  நிலங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் குறைந்தது 2,600 பேருந்துகள், 4,700 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 5,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். மோடி பிரதமராக  பதவியேற்றதிலிருந்து, 2014ல் சீன அதிபர் ஜி ஜின்பிங், 2017ல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 2018ல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல  நாடுகளின் தலைவர்கள் தங்கள் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அகமதாபாத்திற்கு விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த  பட்டியலில், அமெரிக்க அதிபர் டிரம்பும் சேர்ந்துள்ளார்.

மோடி என் நண்பர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அவர் (பிரதமர் மோடி) எனது நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர்; நான்  இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். எனவே, இம்மாத இறுதியில் இந்தியா செல்கிறோம். இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக அவர்கள் (இந்தியர்)  ஏதாவது செய்ய விரும்புகிறார்களா? என்பதை நாங்கள் பார்ப்போம். சரியான ஒப்பந்தத்தை செய்ய முடிந்தால், நாங்கள் அதனை செய்வோம். மில்லியன்  கணக்கான மக்கள் என்னை வரவேற்க உள்ளதாக, மோடி என்னிடம் தெரிவித்தார்’’ என்றார்.



Tags : President ,Pip ,US ,Ahmedabad ,India ,Kem Som ,Gujarat ,Trump , Pip. US President to visit India on May 24 Like Kem Som for Trump ... Ahmedabad is the city of Gujarat
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...