×

விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை: திருச்சி தம்பதிகள் உள்பட 8 பேர் சிறையிலடைப்பு: ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டம்

திருச்சி,திருச்சியில் குழந்தைகளை விற்ற 2 தம்பதி உள்பட 8 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். குழந்தை விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதுமிருந்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே சிறையில் உள்ள ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் 2 ஆண் குழந்தைகள் பேரம் பேசி விற்கப்பட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலகுழுமம் மற்றும் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. விசாரணையில் திருவெறும்பூர் சுருளிகோவில் தெருவை சேர்ந்த டிரைவர் கோவிந்தன்அஸ்வினி தம்பதி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருவெறும்பூர் காந்தி நகர் புரோக்கர் மூலம் ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அஜீம் நடத்திய விசாரணையில், பெட்டவாய்த்தலை காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முருகேசன் மனைவி புவனேஸ்வரி என்பவருக்கு திருச்சி ஜிஹெச்சில் பிறந்த ஆண் குழந்தையை வளர்க்க முடியாததால், ஜிஹெச்சில் வேலை பார்த்து வந்த துப்புரவு ஊழியர் வேலம்மாள் (எ) வெண்ணிலா என்பவர் உதவியுடன் கோவிந்தன்அஸ்வினி தம்பதியினர் ரூ.1லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கியது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் புவனேஸ்வரி (42), துப்புரவு ஊழியர் வேலம்மாள் (42), இவருக்கு உதவியாக இருந்த திருவெறும்பூர் சுருளிகோவில் தெரு லூர்துமேரி (55), குழந்தையை வாங்கிய அஸ்வினி (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அஸ்வினியின் கணவர் தலைமறைவானார்.

இதேபோல் திருவெறும்பூர் அடுத்த குவளக்குடியில் வாட்ச்மேன் வேலை செய்துவந்த ராணி(27)தர்மராஜ்(30) தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையை, குழந்தையில்லாமல் இருந்த அவர்களது உறவினர் உப்பிலியபுரம் புதுப்பட்டியை சேர்ந்த குமார்(30)சாரதா(27) தம்பதியினருக்கு குழந்தையை ரூ.7 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக 2 தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.குழந்தையை வாங்கிய இரு தரப்பினரும் பரஸ்பரம் செய்துகொண்டதில் குழந்தையை தத்து எடுத்துகொண்டதாக கடன் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு கொண்டனர். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 ஆண்கள் உள்பட 8 பேரும் ஜேஎம் 6 நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். குழந்தை விற்பனை விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதுமிருந்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தையை தத்து எடுத்தவர்கள் முறைப்படி ஆவணங்கள் அடிப்படையில் தத்து பெற்றார்களா, பணம் கொடுத்து பெற்றார்களா என்று விசாரிக்கப்படுகிறது. முறைகேடாக தத்து எடுத்தவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : children ,Whistleblower Children ,couples ,Trichy , Whisper, children, sales, 8 people, incarceration
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...