×

திண்டிவனம் கமிட்டிக்கு உளுந்து வரத்து அதிகரிப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தை சுற்றியுள்ள 200க்கும்  மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்படும் உணவு பொருட்களை  திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். குறிப்பாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அதிகளவில் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். திண்டிவனம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நொளம்பூர், ஆவணிப்பூர், பாங்கொளத்தூர், கம்பூர், பட்டணம், ஊரல்  வெண்மணியாத்தூர், பெரப்பேரி, கோவிந்தாபுரம், காட்டுச்சிவிரி, புளியனூர்  உள்ளிட்ட திண்டிவனத்தை சுற்றியுள்ள கிராம விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதி விவசாயிகள், உளுந்து, பனிப்பயிர், எள் ஆகியவற்றை அதிக அளவில் பயிர் செய்துள்ளனர். அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால் மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து, எள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை 3 மணி முதல்  உளுந்து, பனிபயிர், எள் ஆகிய தானியங்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனால் திண்டிவனம்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காலை முதலே கூட்டம் அலைமோதியது.

உளுந்து ஒரு  மூட்டை ரூ.6409, பனிப்பயிர் ரூ.7079, எள் ரூ.8820, பச்சை பயிர் ரூ.7120 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  நேற்று ஒரே நாளில் 300 உளுந்து மூட்டைகள், 300 பனி பயிர் மூட்டைகள், 200 எள் மூட்டைகளை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்தனர்.இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் கூறும்போது, தற்போது உளுந்து, பனிப்பயிர், பச்சை  பயிர் ஆகியவை வரத்து அதிகரித்துள்ளது. வியாபாரிகள்  ஒவ்வொருவரும் விலை நிர்ணயம் செய்து எழுதித் தருவதை கொண்டு அதில் யார் அதிக  விலைக்கு கோருகிறார்களோ, அந்த விலை நிர்ணயம்  செய்யப்பட்டு, இ-பேமண்ட் மூலம் விவசாயிகளுக்கு பட்டுவாடா  செய்யப்படுகிறது என்றார்.

Tags : Tindivanam Committee ,Tindivanam ,Uluwantu ,Committee , Tindivanam, Committee, Uluwantu, Increase
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...