×

ஆம்ஆத்மியின் வளர்ச்சியால் அடுத்தடுத்த தேர்தலில் படுதோல்வி: 66ல் 63 தொகுதியில் காங். டெபாசிட் காலி...தேசிய தலைநகரில் அடையாளத்தை தொலைத்த காங்கிரஸ்

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியில் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது. தற்போது நடந்து  முடிந்த பேரவை தேர்தலில் 66 இடங்களில் போட்டியிட்டு 63 இடங்களில் டெபாசிட் இழந்தது. தேசிய தலைநகரில் காங்கிரஸ் கட்சி தனது அடையாளத்தை  தொலைத்து வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தலைநகர் டெல்லி அரசியல் வட்டாரத்தில் இன்று பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள  காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள 70 சட்டப் பேரவை தொகுதியில் 66 இடங்களில் போட்டியிட்டது. இம்முறை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி)  உடன் இணைந்து, அக்கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்கியது.

நேற்றைய தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 22.46 சதவீத வாக்குகளைப் பெற்று, ஆம் ஆத்மி கட்சியை மூன்றாவது  இடத்திற்கு தள்ளியது. அதனால், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூடுதல் வாக்கு சதவீதத்தை பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 2015ல் 9.7  சதவீதத்திலிருந்து இந்த முறை 4.2 சதவீதமாகக் குறைந்தது. அதே 2013 சட்டமன்றத் தேர்தலில் அது 24.55 சதவீத வாக்குகளைப் பெற்றது. குறைந்த சதவீத  வாக்குகளை பெற்று வீழ்ச்சியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட 66 தொகுதியில் 63 தொகுதியில் டெபாசிட்டை (வைப்புத் தொகை) இழந்தது.

காந்தி நகரைச் சேர்ந்த அரவிந்தர் சிங் லவ்லி, பத்லியைச் சேர்ந்த தேவேந்தர் யாதவ், கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த அபிஷேக் தத் ஆகியோர் மட்டுமே தங்கள்  வைப்புகளை சேமிக்க முடிந்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய சாந்தினி சவுக் எம்எல்ஏ அல்கா லம்பா கூட தனது டெபாசிட் தொகையை  இழந்தார். டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ராவின் மகள் சிவானி சோப்ராவும் அவரது வைப்புத்தொகையை இழந்தார்.

டெல்லி சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் யோகானந்த் சாஸ்திரியின் மகள் பிரியங்கா சிங்கின் டெபாசிட்டும் காலியானது. டெல்லி மகிளா காங்கிரசின் துணைத்  தலைவர் 3.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். கட்சியின் பிரசாரக் குழுத் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம்  ஆசாத் நான்காவது இடத்தைப் பிடித்து 2,604 (2.23 சதவீதம்) வாக்குகள் மட்டுமே பெற்றார்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் ஜாமியா பல்கலை வன்முறை சம்பவங்களால் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் காங்கிரஸ்  சிறப்பான வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் கூட வாக்காளர்கள் மத்தியில்  எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி தேர்தல் பிரசாரத்தில் நான்கு பேரணிகளில் பங்கேற்றார். இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு உருவாக்கும் கட்சியின் திட்டங்களை அவர் முன்வைத்தார். ஆனால், அவரது பிரசாரம் வாக்காளர்களிடமிருந்து ஆதரவைப் பெறவில்லை.
 
டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, கட்சியின் தோல்விக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ‘தோல்விக்கு என்ன தவறு நடந்துள்ளது என்பதை கட்சி  ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியது மட்டுமின்றி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ்  மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே பிரசாரம்  செய்தனர். இவர்கள் பிரசாரம் செய்த அனைத்து இடங்களிலும் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

 குறிப்பாக ஜங்புரா, சங்கம் விஹார், சாந்தினி சவுக் மற்றும் கோண்ட்லி ஆகிய ெதாகுதிகளை கூறலாம். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை  சந்தித்து வருவதால், டெல்லியை பொறுத்தவரை காங்கிரசின் எதிர்காலம் இருண்ட காலத்திற்கு வழிவகுக்கிறது. அதேபோல், பீகார், மேற்குவங்கம் மற்றும்  ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் இல்லை. கோட்டையாக இருந்த இந்த மாநிலங்கள் பிராந்தியக் கட்சிகளின் எழுச்சியால் வீழ்ச்சியை சந்தித்து  வருகின்றன. 2018 பிற்பகுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சமீபத்தில் ஜார்க்கண்டில் காங்கிரஸ் 16 இடங்களில்  வென்று, அம்மாநில ஜே.எம்.எம் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

‘தலைநகர் டெல்லியில் ஒரு தேசிய கட்சி தனது அடையாளத்தை தொலைக்கிறது என்றால், அது தேசிய அரசியலில் சுருங்குகிறது என்றே அர்த்தம். டெல்லி  பற்றிய இந்த உண்மை எங்கள் தலைமைக்குத் தெரியும். காங்கிரசால் இந்த முடிவை லேசாக எடுக்க முடியாது. கட்சிக்குள் நிறைய குளறுபடிகள் உள்ளன.  நிர்வாகிகள் இடையே ஒருங்கிணைப்பும் இல்லை. மாநில கட்சிகளை வளர்த்துவிடவே, சோரம் போகின்றனர்’ என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்  தெரிவித்தனர்.

காங். தோல்விக்கு யார் காரணம்?

* காங்கிரஸ் தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், ‘‘கடந்த 2013ம் ஆண்டில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது  முதல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. குறிப்பாக புதியதாக உருவான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை  கையகப்படுத்திக்கொண்டது. அதை காங்கிரஸ் கட்சியால் இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சி இருக்கும் வரை காங்கிரசால் முன்னேற  முடியாது’’ என்றார்.

* முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி  மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்  நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று  பதிவிட்டிருந்தார்.

* ப.சிதம்பரத்தின் ட்விட் பதிவை தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும்,  மஹிளா காங்கிரசின் முக்கியப் பொறுப்பாளருமான சர்மிஷ்டா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை  சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை  முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை அவுட்சோர்ஸிங் முறையில் நியமித்துள்ளதா? அப்படியில்லை என்றால்  எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன்  கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது!’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரின் ட்வீட்டுக்கு முக்கிய பெண் நிர்வாகி ஒருவர் எதிர்வினையாற்றியுள்ளது டெல்லி அரசியல் மற்றும் காங்கிரஸ்  வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

Tags : elections ,Congress ,capital ,National Capital , Impending defeat in subsequent elections: 63 out of 66 seats in Cong. Deposit vacancy ... Congress loses identity in national capital
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...