×

FASTag பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி: NHAI சுங்கச்சாவடியில் பிப்.15 முதல் 29 வரை ரூ.100 தள்ளுபடி...மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 540  சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதனால், எரிபொருள்  மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் நேரம், எரிபொருள் விரயம்  ஆவது மிச்சமாகும்.இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் கார்டு அனைத்து  சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே,  டோல் ப்ளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் பாஸ்டேக் அறிமுகத்துக்கு முன்னர் இருந்ததைவிட 29 சதவிகித அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

இது தொடர்பாக, மாநிலங்களவையில் சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கமளித்த மத்திய சாலை, போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, “நாடு முழுவதும்  தற்போது டோல் ப்ளாசாக்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது உண்மைதான்.
பாஸ்டேக் அல்லாமல் இன்னும் பல இடங்களில் ரொக்கமும் ஏற்றுக்கொள்ளப்படும் சூழல் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது.  இதுவரையில் 1.4 கோடி பாஸ்டேக்  வழங்கியுள்ளோம். இன்னும் கூடுதலாக 1 கோடி பாஸ்டேக் வழங்கவும் தயாராகி உள்ளோம். விரைவில் காத்திருப்பு நேரம் குறையும்” என்றார்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய சுங்கச்சாவடிகளில் மட்டும் மத்திய அரசு தள்ளுபடி அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய சுங்கச்சாவடிகளில்  FASTag பயன்படுத்துவோருக்கு பிப்ரவரி 15 முதல் 29-ம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

சாலை பயனாளர்கள் வாகனத்தின் செல்லுபடியாகும் பதிவு சான்றிதழுடன் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட FASTag மையத்தில் பார்வையிடலாம் மற்றும் இலவசமாக ஒரு NHAI FASTag ஐப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. FASTag பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Central Government Announcement ,NHAI , Attempt to increase FASTag usage: Rs 100 discount on NHAI tariff from Feb 15 to 29 ...
× RELATED 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழக...