×

வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களில் புடவை கொண்டு வேலி: அரூர் பகுதி விவசாயிகள் புது யுக்தி

அரூர்: அரூர் பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள், புடவையில் ேவலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், மருதிப்பட்டி, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, ஈச்சம்பாடி, கொளகம்பட்டி, பொய்யப்பட்டி, எட்டிப்பட்டி, வள்ளிமதுரை ஆகிய வனப்பகுதியில் ஏராளமான மான், முயல், காட்டுபன்றி ஆகியவை உள்ளது. வனப்பகுதியில் உள்ள விலங்குகள் இரவு நேரத்தில் உணவு தேடி, வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள விவசாயிகள், இரவு நேரங்களில் காவல் காத்து வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்கும் சூழல் உள்ளது. வன விலங்குகளை விரட்ட முற்படும் நபர்களை, விலங்குகள் தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இது குறித்து வனத்துறைக்கு புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் புது யுக்தியாக பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தை சுற்றிலும், கிழிந்த புடவைகளை, பிளாஸ் கவர்களை வேலி போல் அமைத்துள்ளனர்.

இதனால் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது சிறிதளவு குறைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகள் விவசாய நிலப்பகுதிக்கு வருவதை தடுக்க, வனப்பகுதியில் வேலி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்க வழி வகை செய்தால் வன விலங்குகள் விவசாய தோட்டங்களில் நுழைவதை தடுக்க முடியும். மேலும் தண்ணீர், உணவு தேடி வரும் வனவிலங்குகள், வாகனங்களில் மோதியும், நாய்கள் கடித்து உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க முடியும் என்றனர்.

Tags : farmland ,Aroor ,area farmers , Wildlife, fruit fields, fence, arur
× RELATED 43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை