×

மரக்காணம் அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

மரக்காணம்: மரக்காணம் அருகே இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீரால் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது ஆட்சிக்காடு கிராமம். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் தங்களது விளைநிலங்களில் நெல், மணிலா, கேழ்வரகு போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். ஆனால் விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் இங்குள்ள ஒரு சிலர் தங்களது விளைநிலங்களில் தைலம் மற்றும் சவுக்கு  மரங்களை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கடற்கரையோரம் தனி நபருக்கு சொந்தமான இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ரசாயன கழிவுநீரை அருகில் இருக்கும் வயல்வெளியில் திறந்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தொழிற்சாலை ரசாயன கழிவுநீரால் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு மரங்கள் மற்றும் புல் பூண்டுகள் காய்ந்து அழிந்து விடுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் இந்த கழிவுநீரில் இருந்து வரும் ஒரு விதமான நெடியால்  அவ்வழியாக செல்பவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளை உருவாக்கி விடுவதாக பொதுமக்கள் குறை  கூறுகின்றனர்.

விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு அதில் இருக்கும் புல், பூண்டுகள் அழிந்து வருவதால் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை கூட வளர்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி விளைநிலங்களை அழிக்கும் இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலை மீது  ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : factory ,Marakkanam , Timber, Industrial, Chemical Waste, Farms, Farmers
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...