×

காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம், புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டு, தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் இப்பகுதிகளில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

முதல்வர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், விவசாயத்தை காக்கவும், விவசாயம் சார்ந்த தொழில்களை வளப்படுத்தவும், காவிரி கடைமடைப்பகுதியான காரைக்கால் மாவட்டத்தையும், புதுச்சேரி பாகூர் பகுதியையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானத்தை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேரவையில் முன்மொழிந்தார். அமைச்சர் பேரவையில் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்த பின்னர், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் முடிவடைந்து, பேரவையை காலவரையின்றி சபாநாயகர் சிவகொழுந்து ஒத்திவைத்தார். முன்னதாக, இந்த கூட்டத்தில் சிஏஏவுக்கு எதிராகவும், அதே சமயம் தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை திரும்பப்பெற வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Karaikal ,district ,session ,Puducherry , Karaikal, Agricultural Zone, Puducherry, Legislative Council, Resolution
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...