×

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நீரேற்று நிலையம் அமைக்கும் பணி: மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பணை

ஈரோடு: ஈரோடு,  திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான முதல்  நீரேற்று நிலையம் பவானி  ஆற்றில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள்,  குளங்களை நிரப்பும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடி  மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9 ஆயிரத்து  902 ஹெக்டேர் பரப்பளவில் பாசன வசதி பெறும். ஈரோடு மாவட்டம் பவானிசாகர்  அணையில் இருந்து வரும் பவானி ஆற்றுநீரானது கொடிவேரி, அத்தாணி, ஆப்பக்கூடல்  வழியாக பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக சென்று உபரிநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீரை  பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ஈரோடு அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் முதல் நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த நீரேற்று நிலையம் அமைப்பதற்காக அணைக்கட்டின் கீழ் பகுதியில் ராட்சத தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் அணைக்கட்டில் இருந்து வரும் நீரை மணல் மூட்டைகள் வைத்து தடுத்து தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தொட்டிகள் அமைக்க குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த முதல் நீரேற்று நிலையத்தில் இருந்து நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு  செல்லப்பட்டு அங்கிருந்து 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 44 குளங்கள்,  குட்டைகளை குழாய்கள் மூலமாக தண்ணீரை கொண்டு சென்று நிரப்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு குளம், குட்டைகளுக்கு வழங்கப்படும் நீரை கம்ப்யூட்டர் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு மூலமாக இயக்கப்படவுள்ளது. அனைத்து குளம், குட்டைகளுக்கு முறயைான நீர் பகிர்மானம் செய்யப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படவுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று உபரிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி உபரிநீர் 1.5 டி.எம்.சி. தண்ணீரை குழாய்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு குளம், குட்டைகளை நிரப்ப  வழிவகை செய்யப்பட்டுள்ளது. காலிங்கராயன் தடுப்பணையின்கீழ் கட்டப்படும் புதிய தடுப்பணை மூலமாக திருப்பப்படும் நீரை 2.20 மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் மூலமாக 40 கி.மீட்டர் வரையிலும், அதன்பின் விட்டம் குறைவான  மைல்டு ஸ்டீல், எச்.டி.பி.இ குழாய்கள் மூலம் கடைசி வரை நீர் கொண்டு செல்லப்படும்.

6 நீரேற்று நிலையங்களில் இருந்து பூமிக்கடியில் பிரதான குழாய்கள் வழியாக 956 கி.மீட்டர் தூரம் பல்வேறு அளவுள்ள குழாய்கள்  பதிக்கப்படவுள்ளது. தற்போது முதல் நீரேற்று நிலையமான காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் பெரிய அளவிலான ராட்ச தொட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கிருந்து உபரியாக வெளியேறும் 1.5  டி.எம்.சி. நீர் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்காக  பயன்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்போது  ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தெரிவித்தனர்.

Tags : Hydraulic Station ,Hydraulic Station of Establishment , Attica, Avinasi, Project, Hydraulic Station, Sand Bundle, Block
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...