×

ஆலங்குடி பகுதியில் அதிக பற்றாக்குறை ஆழ்குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீரை சேகரித்து சாகுபடி: வரத்துவாரிகளை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

திருமயம்: ஆலங்குடி பகுதியில் பற்றாக்குறை நிலவுவதால் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பள்ளத்தில் சேகரித்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், பள்ளத்திவிடுதி, வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, அரையப்பட்டி, வன்னியன்விடுதி, குப்பகுடி, கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும், அதேபோல் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட மாங்கோட்டை, தெற்குத்தெரு, நம்பன்பட்டி, விஜயரெகுநாதப்பட்டி ஆகிய பகுதிகளிலும் அதிகளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.முன்னொரு காலத்தில் இப்பகுதிகளில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களில் அதிகளவு தண்ணீர் நிறைந்திருக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் விவசாயிகள் நெல், கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களையும், மா, பலா, வாழை போன்ற முக்கனிகளையும் பயிரிட்டு அதிக மகசூலும் பெற்று வந்தனர். மேலும் இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆலங்குடி பகுதி செழிப்பான பகுதியாகவும் இருந்தது.
ஆனால் தற்போது வறட்சியின் படியில் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் இப்பகுதியில் மழையளவு குறைய துவங்கியபோது குளங்கள் மற்றும் கண்மாய்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு போனது. இதனால் குளம் மற்றும் கண்மாய்கள் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் 600 முதல் 1000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதிலிருந்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியால் நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கும் சிறிதளவு தண்ணீரை 8 அடி ஆழமுள்ள பள்ளம் அமைத்தும், பழைய கிணறுகளில் தண்ணீரை நிரப்பியும் மின்மோட்டார் மூலம் அந்த தண்ணீரை வயலுக்கு பாய்ச்சி விவசாயம் செய்யும் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறுகையில், எங்கள் பகுதி வானம் பார்த்த பூமியாக இருந்தது. முன்பெல்லாம் பருவமழை நன்றாக பெய்யும். அதனால் குளங்கள் மற்றும் கண்மாய்களில் அதிகளவில் தண்ணீர் இருக்கும். அதை பயன்படுத்தி அதிகளவில் விவசாயம் செய்து அதிகப்படியான மகசூலை பெற்றோம். காலப்போக்கில் பருவமழை படிப்படியாக குறைய துவங்கியபோது எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பயிர்களையும் பாதுகாப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்தனர். அதை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தோம். ஆனால் தற்போது பருவமழை பொய்த்துப்போனதால் குளம், கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு தற்போது சிறிதளவு தண்ணீர் மட்டுமே வருகிறது. அதை பள்ளத்தில் சேமித்து மின் மோட்டார் மூலம் இறைத்து விவசாயம் செய்து வருகிறோம். இதுபோன்ற வறட்சி மீண்டும் தலைதூக்காமல் இருக்க அவ்வப்போது பெய்து வரும் மழைநீரை வீணாக்காமல் குளம் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வரத்து வாரிகளை தூர்வார அரசு முன்வர வேண்டும். மேலும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சம் பார்க்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க
முடியும் என்றார்.

விவசாயிகள் 600 முதல் 1000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதிலிருந்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியால் நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வறட்சி மீண்டும் தலைதூக்காமல் இருக்க அவ்வப்போது பெய்து வரும் மழைநீரை வீணாக்காமல் குளம் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வரத்து வாரிகளை தூர்வார அரசு முன்வர வேண்டும். மேலும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சம் பார்க்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : area ,Alangudi , High scarcity ,Alangudi ,deep ,tanks,farmers
× RELATED ‘எங்க ஏரியா... உள்ள வராதே’ முட்செடிகள்...