×

மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம்

* தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
* பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் குறித்த தகவல் வரும் தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை நகரில் போக்குவரத்து நெருக்கடி தீராத தலைவலியாக நீடிக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நான்கு மாசி வீதிகள் வரை ஒருவழி பாதையாக ஆக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கீழ வெளிவீதி, தெற்கு வெளிவீதி ஒரு வழிப்பாதையாக உள்ளன. வடக்கு வெளிவீதியிலுள்ள சிம்மக்கல் போன்ற வீதிகளும் ஒரு வழி பாதையாகி உள்ளன. ஆனாலும் மேலவெளிவீதி, சிம்மக்கல், யானைக்கல் பகுதியில் நெருக்கடி அதிகரித்து வாகனங்கள் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் வாகனங்கள் நகர முடியாத மோசமான நிலை ஏற்படும் என போக்குவரத்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.நாட்டில், முக்கிய நகரங்களில் 10 லட்சம் மக்களுக்கு மேல் உள்ள நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தலாம் என கடந்த 2009ல் பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்போது, 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு ரூ.103 லட்சம் கோடி செலவழிக்கப்போவதற்கான திட்டங்கள் தீட்டி அதில் நாடு முழுவதும் 32 நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுரையில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய நகரமாகவும் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெருக்கடியால் மதுரை நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமான பலன்தரவில்லை. வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள் போதுமான அகலம் இல்லாததால், தேவையான உயர்மட்ட பாலம் அமைக்க முடியவில்லை என்பது முக்கிய காரணமாகும். இதனால், மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது போக்குவரத்து சிக்கலை பெருமளவு சமாளித்திட உதவும்.* தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறும்போது, ‘‘மதுரையில் தற்போது பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்றால், மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியம். இந்த திட்டத்தினால், போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். இதற்கான செலவினத்தை மாநில அரசின் பங்களிப்பை வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மதுரை மெட்ரோ ரயில் சேவையானது மதுரைக்கு அருகே உள்ள மேலூர், மதுரை விமான நிலையம், திருமங்கலம், காமராஜர் பல்கலைக்கழகம் வழியாக உசிலம்பட்டி, நத்தம், அழகர்கோயில், திண்டுக்கல் வரை மெட்ரோ ரயில் தொடர்பு ஏற்படுத்திட முடியும். இதன்மூலம் தங்கள் குடியிருப்பை சிறிய நகரில் வைத்துக்கொண்டு, தொழில், வணிகத்திற்கும், பணிகளுக்கும், கல்லூரி, பள்ளிகளில் படிக்க மதுரைக்கு எளிதில் வரலாம். இதுபோன்ற திட்டத்தை வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.



Tags : Madurai , Metro rail, traffic ,ngestion ,Madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...