×

அருப்புக்கோட்டையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ராமசாமிபுரம் ரோட்டில் குழாய் உடைப்பால், தாமிரபரணி குடிநீர் வீணாகும அவலம் ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி வல்லநாடு பகுதியில் இருந்து 120 கி.மீ தொலைவில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் அருப்புக்கோட்டை கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் ரோடு, வட்டார போக்குவரத்து கழகம் அருகில், பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி குளம்போல் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் ரோட்டின் இருபுறமும் ரோட்டை அகலப்படுத்தியும், பாலத்தை அகலப்படுத்தவும், ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டியபோது பிவிசி குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகச் செல்கிறது.

இதனால் சுக்கில்நத்தம், மீனாட்சிபுரம், திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம், ஆமணக்குநத்தம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியிலிருந்து எப்போதும்வென்றான், மேலக்கரந்தை, கைலாசபுரம் ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது. இதனால் அருப்புக்கோட்டை, விருதுநகர், மல்லாங்கிணர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே, குடிநீர் வடிகால் வாரியத்தினர் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்புக்களை உடனடியாக சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Aruppukkottai , Drinking water ,Aruppukkottai,Public demand ,revamp
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...