×

பல்லுயிர் வாழ்விடச் சூழலை சிதைக்கும் முட்கம்பி வேலிகள்: சாலைகளில் மடியும் பல்லுயிரிகள்

காங்கயம்:திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கையான நில அமைப்பு குறுங்காடும், மேட்டுப்பாங்கான நில அமைப்பும் கொண்டதாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் ஆறுகளை கொண்டு கட்டப்பட்ட நீர்பாசன திட்டங்கள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு குறுங்காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக பெருமளவு மாற்றம் கண்டு இன்று அத்தகைய முல்லை நிலக்காடுகளே இல்லாமல் போனது. இதன் தாக்கம் தற்போது காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி, பொங்கலூர் மற்றும் சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களின் பாதுகாப்பு அரணாக அமைந்திருக்கும் இயற்கை உயிர்வேலிகளை அழித்து, கம்பி வேலியாக அமைப்பது அதிகரித்து வருகிறது. ஆனாலும் தற்போது இப்பகுதிகளில் மீதமுள்ள இயற்கை உயிர்வேலிகள் அழிப்பு என்பது தொடங்கியுள்ளது. விவசாய நிலங்களில் உயிர்வேலியாக மரக்கிளுவை, கிளுவை மற்றும் கள்ளி அமைந்துள்ளது. இந்த உயிர்வேலிகளால் தங்களது நிலங்களில் விவசாயிகள் ஆடு வளர்ப்பு மற்றும் மானாவாரி பயிர்களை காக்க உதவியாக இருந்து வருகிறது. இதில் கிளுவை வேலிகளை ஒவ்வொரு ஆண்டும் வெட்டி அடைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு செய்யவேண்டி இருப்பதால் விவசாயிகளுக்கு இதன் மூலம் செலவும்.

இந்த பணியை செய்யும் ஆட்கள் பற்றாக்குறையும் இருப்பதால், உயிர்வேலிகளை அழித்துவிட்டு கம்பி வேலிகள் அமைப்பது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இயற்கை கிளுவை உயிர்வேலிகளில் இருந்த நொச்சி, சோத்து கற்றாழை, ஆடுதொடா, மற்றும் பிரண்டை, தூதுவாளை, முடக்கத்தான், கொவ்வை கொடி, புளிச்சான் ஆகிய மூலிகை செடிகளும் அழிந்து விட்டது. மேலும் மரவகைகளான வேம்பு, பாலை, அத்தி, அழிஞ்சி, புருசன், ஆயன், அரக்கு, உள்ளிட்டவையும் அழிந்துவிட்டது. உயிர்வேலி அதிகம் இருந்தவரை அதனை வாழ்விடமாக கொண்ட கீரி, நரி, கள்ளிக்காக்கை மற்றும் உடும்புகள், மயில்களின் மூட்டைகளை உணவாக உண்டதால் அதன் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து விவசாய பயிர்களை அழிப்பது குறைவாக இருந்தது. ஆனால் தற்போது  இவ்வகை வேலிகள் அழிப்பால் சமீபகாலமாக மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்து விவசாய நிலங்களில் எந்த பயிரும் பயிரிட முடியாது என்ற விலையை கொடுத்துள்ளனர். இவ்வகை உயிர்வேலிகள் அழித்து வருவதால் சுற்றுச்சூழலில் பெரும் அழிவினை ஏற்படுத்தி வருவதை நாம் இப்போது காண முடிகிறது. இயற்கை வேலிகளை வாழ்விடங்களாக கொண்ட பச்சோந்தி, காடை, முயல், கொளதாரி,கீரி மற்றும் நரி, கள்ளிக் காக்கை, கள்ளிப் புறா உள்ளிட்டவை அரிதானதாக மாறிவிட்டது.

குறிப்பாக சிறு நரியினமே காணாமல் போய்விட்டது என்றே கூறலாம். மேலும் வேலிகள் அழிப்பால் இந்த சிற்றினங்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் மிஞ்சியிருக்கும் கிளுவை வேலிகளும் பராமரிக்க முடியாது எனும் எண்ணத்தில் விவசாயிகள் பலரும் அழித்து கம்பி வேலிகளை அமைப்பது அதிகரித்து வருகிறது. உயிர்வேலிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளை அறியாமல் அவற்றை அழித்ததால் இன்று மயில்கள் பெருகி அதன் பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர். உயிர்வேலி அழிப்பால் வரும் காலங்களில் சுற்றுச்சூழலில் ஏற்படப்போகும் பெரும் மாற்றம் உணவு உற்பத்தியே இல்லாமல் போகும் முன் உயிர்வேலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Tags : roads , Biodiversity, habitat, Fold , roads, Palluyirikal
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...