×

பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி சாலையோரம் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம்: அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியையொட்டி நெடுஞ்சாலையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், வனவிலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பேரணாம்பட்டு அடுத்த செர்லேபல்லி மேடு வனப்பகுதியில், பேரணாம்பட்டு- குடியாத்தம் நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் வன விலங்குகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:பேரணாம்பட்டு அடுத்த செர்லேபல்லி மேடு அருகே வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருப்புறமும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதற்காக இரவு நேரத்தில் வெளியே வரும் வனவிலங்குகள் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல், இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதால் வன விலங்குகளுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இறைச்சி கழிவுகளில் ஈக்கள் மொய்த்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இறைச்சி கடைகள் கண்காணிக்கப்படுமா?
இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நாய்கள் இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதால் வெறிப்பிடிக்கும். அதேபோல் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, இறைச்சி கழிவுகளை குறிப்பிட்ட ஆழத்துக்கு பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால், இறைச்சி கழிவுகளை அகற்றுவதில் விதிமுறைகள் மீறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கடைகளை கண்காணிப்பதில் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கடைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Author ,Road , Peranampattu forest, shedding ,meat,negligence
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...