×

சிறைக் கைதிகள் தேர்தலில் வாக்குரிமை கோருவது அடிப்படை உரிமை அல்ல : டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி : சிறைகைதிகளுக்கு தேர்தலின் போது, வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கோரி, தாக்கல் செய்த மனுவை  டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து  கைதிகளுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கோரி மூன்று சட்ட மாணவர்களான பிரவீன் குமார் சவுத்ரி, அதுல் குமார் துபே மற்றும் பிரேர்னா சிங் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த பொது நல மனு தலைமை நீதிபதி டி.என். படேல், ஹரிஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைக் கைதிகள் வாக்குரிமை கோருவது அடிப்படை  உரிமை அல்ல என்றும் இது சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்ததை அந்த அமர்வு சுட்டிக் காட்டியது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் படி, சிறைக் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க அனுமதியில்லை என்று தெரிவித்தது. இதே வழக்கில் சிறை கைதிகள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதிட்டது. இது தொடர்பாக 1997ம் ஆண்டு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியது.  

மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் படி

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்று வாக்களிக்கும் உரிமை தொடர்பான, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,1951 ன் பிரிவு 62 கூறுகிறது. அதன் உட்பிரிவு (5), தண்டனைக்காக சிறையில் அடைக்கபட்டிருக்கும், அல்லது அதற்காகக் கொண்டு செல்லப்படும், அல்லது முன்னெச்சரிக்கை கைது தவிர்த்த சட்டப்படியான காவல்துறையின் காவலில் உள்ள எவர் ஒருவரும் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது என்று கூறுகிறது. 


Tags : Prisoners ,elections ,Delhi High Court , Prisoners, Election, Voting, Right, Delhi High Court
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...