×

தூத்துக்குடி அருகே பயிர்களை அழித்து விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க முயற்சி: விவசாயிகள் திரண்டதால் அதிகாரிகள் ஓட்டம்

புதுக்கோட்டை: தூத்துக்குடி அருகே நெற்பயிர்களை அழித்து, விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. இதையறிந்த விவசாயிகள் திரண்டு வந்ததால் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை கைது செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தாமிரபரணி வைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது.
 
குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள், பொட்டல்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், கல்லூரி, குடியிருப்பு பகுதி அருகிலும் எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எரிவாயு குழாய் அமைத்தால் விவசாய நிலங்கள் அழிவதுடன், குழாய்களில் கசிவு உள்ளிட்ட விபத்துகள் ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் விவசாயிகள் யாரும் இல்லாத நேரத்தில், குலையன்கரிசல் பகுதி வயல்களில் எரிவாயு குழாய்கள் அமைப்பதற்கான பணிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தை சேர்ந்த திட்ட மேலாளர் குருமூர்த்தி தலைமையில் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே அப்பகுதியில் இறக்கி வைத்திருந்த எரிவாயு குழாய்களை பதிப்பதற்காக நெற் பயிர்கள் வளர்ந்துள்ள விளைநிலங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு திருத்தினர். இதனால் அந்த வயல்வெளிகளில் நன்கு வளர்ந்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து விவசாயிகள் திரண்டு வருவதை பார்த்த எண்ணெய் நிறுவன ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். பலநாள் பாடுபட்டு வளர்த்த பயிர்களை திடீரென பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அழித்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர். சேதமான பயிர்களை கையில் எடுத்துக் கொண்டு கண் கலங்கினர். பின்னர் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், அழித்த நெற்பயிர்களை கையில் ஏந்திக் கொண்டு சேதப்படுத்தப்பட்ட வயல்களில் நின்றபடியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து பயிற்சி ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி கலைக்கதிரவன், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தால், வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைப்பதை கண்டித்து தாமிரபரணி வைகுண்டம்  வடகால் பாசனம் மூலம் பயன்பெறும் குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு,  அத்திமரப்பட்டி, கூட்டாம்புளி, கோரம்பள்ளம், காலங்கரை, சேர்வைகாரன்மடம்,  உமரிக்காடு, சிவகளை, பேரூர், வீரநாயக்கன்தட்டு, அய்யனடைப்பு, மறவன்மடம் என  சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வருகிற 22ம் தேதி உண்ணாவிரத  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் குலையன்கரிசல் பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே விவசாய தொழிலில்  ஈடுபட்டுள்ளவர்கள், போதிய வருமானமின்றி வேறு தொழிலுக்கு சென்று  கொண்டிருக்கின்றனர். சில பகுதியில் நடந்து வரும் விவசாயத்தையும் அழிக்கும்  வகையிலான இதுபோன்ற திட்டங்களை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி  செய்ய வேண்டும் என்றனர்.

5 முறை மனு அளித்தும் அலட்சியம்

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்காமல் மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் 5 முறை விவசாயிகள் மனு அளித்து உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் எங்கள் மனுக்கள் அலட்சியமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags : farmland ,Crops ,Thoothukudi , Thoothukudi, Cultivation, Gas Pipeline, Farmers, Officers
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்