×

தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடக வனப்பகுதிக்கு 30 யானைகள் விரட்டியடிப்பு: விவசாயிகள் நிம்மதி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம் செய்து வந்த 30 யானைகளை, வனத்துறையினர் போராடி கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்த 100க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 3 மாதங்களாக தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ஓசூர், சானமாவு, ஊடேதுர்க்கம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த ராகி, தக்காளி, நெல், வாழை, முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வந்தன. இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. விளைநிலங்களில் சுற்றி திரியும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டிருந்த 30 யானைகனை, நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சீதாராமன் (பொ) தலைமையில் வனவர்கள் கதிரவன், ஈஸ்வரன், மோசிகிரண் அடங்கிய குழுவினர், பட்டாசு வெடித்து தாவரக்கரை காட்டிற்கு விரட்டினர். நேற்று காலை மலசோனை, பள்ளப்பள்ளி, அகலகோட்டை வழியாக ஜவளகிரி காட்டு பகுதிக்கு யானைகளை விரட்டிச் சென்று, அங்கிருந்து கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். யானைகள் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : Thenkanikottai ,Karnataka Forest: Farmers ,Karnataka Forest , Thenkanikottai, Karnataka Forest, Elephants, Farmers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி