×

புதுவை ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி: சிசிடிவி கேமராவை பார்வையிட்டு சைபர் கிரைம் தீவிர விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுவை கிழக்கு கடற்கரை சாலை, அமுதசுரபி பெட்ரோல் பங்க் எதிரே தேசிய வங்கியின் ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஏடிஎம் சென்டருக்குள் சென்ற வாலிபர் தனது டெபிட் கார்டை சொருகி பணம் எடுக்க முயற்சித்தார். அப்போது ஏடிஎம் மிஷனில் பின் நம்பர் பதிவு செய்யும் கீ-போர்டுக்கு மேல் பகுதியில் வித்தியாசமான பொருள் இருப்பதை உணர்ந்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து கீ-போர்டுக்கு மேல்புறத்தில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் எடுக்கப்பட்டது. அதில் ரகசிய கேமரா, பேட்டரி, மெமரி கார்டு உள்ளிட்டவை இருந்தது. இதை லாஸ்பேட்டை போலீசார் கைப்பற்றி சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. புதுவையில் ஏற்கனவே ஏடிஎம் மிஷனில் கார்டு சொருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கார்டின் தகவல்களை திருடி போலி டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகளை தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் மீண்டும் ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடி அதன்மூலம் பணத்தை திருட ஒரு கும்பல் திட்டமிட்டு துணிகர செயலில் இறங்கியிருப்பது தெரியவந்துள்ள நிலையில், இதற்கான நடவடிக்கையில் இறங்கிய குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட ஏடிஎம் சென்டரில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஸ்கிம்மர் கருவியை பொருத்திய நபரை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஏடிஎம் சென்டரின் வங்கி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : ATM , ATM, skimmer tool, CCTV camera, cybercrime, intensive investigation
× RELATED வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம்...