×

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது: சொந்த பகையே காரணம் என தகவல்!

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 8ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவரது வாகனம் டெல்லியின் தென்மேற்கில் கிஷன்கார் கிராமத்தில் வந்தபொழுது, மர்ம நபர் ஒருவர் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது 8 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அசோக் மன்(45) என்ற தொண்டர் மீது 6 குண்டுகள் பாய்ந்தன. மேலும், ஹரேந்தர் என்பவர் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து, இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில், அசோக் உயிரிழந்தார், ஹரேந்தர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காலு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அசோக் மன் மற்றும் காலு இடையே ஏற்கனவே சொந்த பகை இருந்துள்ளதாகவும், அவர் 15 நாட்களுக்கு முன்னரே அசோக்குக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த கொலைக்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ள போலீசார், காலு உள்பட தாமி, தேவ் ஆகிய 3 பேர் மீது இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Tags : convoy attack ,AAP MLA ,Delhi AAP , Delhi, AAP, MLA, convoy attack, shooting, arrests
× RELATED குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா