×

கொரோனா பீதியால் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சொகுசு கப்பலில் தவிக்கும் 6 தமிழர்கள்: மதுரையை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் தகவல்

மதுரை: ஜப்பான் துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் பணிபுரியும் மதுரையை சேர்ந்த ஊழியர், வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவலில் தான் உட்பட 6 தமிழர்களும், 100க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்களும் தவிப்பதாக கூறியுள்ளார். “கணவரை மீட்டுத் தாருங்கள்’’ என்று மதுரையைச் சேர்ந்த பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசுக் கப்பலில் அன்பழகன் பணிபுரிந்து வருகிறார். இந்த கப்பலில் உள்ள 3,500 பயணிகளில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி, ஜப்பானின், யோகோஹாமா துறைமுகத்தில் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 யாரையும் கீழிறங்க அனுமதிக்காத நிலையில், மருத்துவக் குழுவினர் கப்பலுக்குள் வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படும் பயணிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர். கப்பலை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் அன்பழகன், அங்கிருந்தபடியே தனது குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கு அனுப்பியுள்ள வாட்ஸ்அப் வீடியோவில், ‘‘இந்த சொகுசுக் கப்பலில் 100க்கும் அதிக இந்திய பணியாளர்கள் உள்ளனர். இதில் நான் உள்பட 6 தமிழர்கள் இருக்கிறோம். தாய்லாந்து நாட்டில் கப்பலேறிய ஒரு முதிய சுற்றுலாப்பயணி மூலமே இந்த கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவியதாக தெரிகிறது. பணியாளர்கள் பாதிப்பின்றி இருக்கிறோம். ஆனாலும் கடந்த 8 நாட்களாக, வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நிமிடமும் கழிகிறது. எங்களை இந்திய அரசு மீட்டு, பாதுகாத்திடவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அன்பழகனின் மனைவி மல்லிகா கண்ணீர் மல்க கூறும்போது, ‘‘கப்பலில் கொரோனா பாதிப்பு முதலில் 10 பேருக்கு இருந்ததாக தெரிவித்தனர். பிறகு 21, அதன் பிறகு 43 என்று படிப்படியாகக் கூறி, இப்போது 60 பேர் வரை பாதித்திருப்பதாக கூறுகின்றனர். சின்ன குழந்தைகளை வைத்துக் கொண்டு நான் மிகவும் அச்சத்தோடு இருக்கிறேன். என் வாழ்க்கை ஆதாரமே என் கணவர்தான். மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்து என் கணவரை மீட்டுத் தர வேண்டும்’’ என்றார்.

வைரலான ஆடியோ
கப்பலில் இருந்து அனுப்பியுள்ள மற்றொரு வாட்ஸ்அப் வீடியோவில் அன்பழகன் பேசும்போது, ‘‘எந்த வைரஸ் பாதிப்பும் இன்றி கப்பலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிற எங்களை காப்பாற்றும்படி வாட்ஸ்அப்பில் ஏற்கனவே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த என்னுடன் பணிபுரியும் ஒருவர் பேசி அனுப்பினார். ஆனால், அது அந்த அளவிற்கு மக்கள், அரசின் கவனத்துக்கு சென்று சேரவில்லை. அதேநேரம், நான் தமிழில் பேசி அனுப்பிய வீடியோ வைரலாகி, தமிழர் வாழும் அனைத்து இடங்களுக்கும் போய் சேர்ந்திருக்கிறது. ஓரிரு வாரத்தில் தமிழ் மண்ணைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Tamils ,Madurai 6 Coronation Panic ,Japanese ,Madurai , Corona, Japan Luxury Ship, Tamils, Madurai, WhatsApp
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...