×

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஐடிஐக்களில் 329 ஜேடிஓ பணியிடத்தில் தகுதியற்றோர் நியமனம்

* அதிகாரிகள், அமைச்சர்களுக்கு பணம் கைமாறியது
* சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு புகார்

விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள அரசு ஐடிஐக்களில் 329 இளநிலை பயிற்சி   அலுவலர்(ஜேடிஓ) பணியிடங்களில் தகுதியற்றவர்களை நியமித்துள்ளதாகவும், தேசியகவுன்சில் விதிகளை பின்பற்றாமல், பலகோடி பணம் பெற்றுக்கொண்டு இவர்களை நியமித்துள்ளதாகவும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.  தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி.   முறைகேடு பூதாகரமாக வெடித்துள்ளது. முறைகேடாக பணம் கொடுத்து வேலைக்கு   சேர்ந்தவர்களிடம் தினசரி விசாரணை நடைபெற்று, கைது நடவடிக்கைகள்   தொடர்ந்து வருகின்றன. அதேபோல், காவலர்தேர்விலும் போலியான சான்றிதழ்களை   கொடுத்து பணியில் சேர முயன்றவர்களை தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம்   தகுதி நீக்கம் செய்துள்ளது. இப்படி, அடுத்தடுத்து அரசுத்துறை வேலைவாய்ப்பில்   முறைகேடு சம்பவங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில்   ஐடிஐக்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களில் தகுதியற்றவர்களை   பணம் வாங்கிக்கொண்டு பணிஆணை வழங்கியுள்ளதாக புகார் வந்துள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள   புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-  தமிழகஅரசின் வேலைவாய்ப்பு மற்றும்   பயிற்சித்துறையின்கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட தொழிற்பயிற்சி   நிலையங்களில்(ஐடிஐ) காலியாக உள்ள 329 இளநிலை பயிற்சி அலுவலர்   பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி   வெளியிட்டனர். நான் உட்பட சுமார் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தோம்.   இந்த பதவிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய என்சிவிடி சில வழிமுறைகளை வகுத்து   அதை மத்திய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநரகம் மூலமாக அனைத்து மாநில   வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகத்திற்கு 7.1.2016   தேதியிட்டு, அந்த ஆணையின் அடிப்படையில், சேர்க்கை, ஆட்களை தேர்வுசெய்தல்,   ஐடிஐக்களை புதுப்பித்தல் உள்ளிட்ட எந்த பணிகளாக இருந்தாலும் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த, ஆணையின்படி இளநிலை பயிற்சி   அலுவலர் பதவிகளை தேர்வு செய்வதற்குண்டான ஆணையை, மாநில வேலைவாய்ப்பு மற்றும்   பயிற்சித்துறை இயக்குநரகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆணையில் குறிப்பிட்டுள்ள   என்சிவிடி(தேசியகவுன்சில்) வழிமுறைகளை பின்பற்றாமல், சம்மந்தப்பட்ட  துறையே  தன்னிச்சையாக தேர்வு விதிமுறைகளை வகுத்து, பல்வேறு  முறைகேடுகளில்  ஈடுபட்டு இந்தபதவிக்கு விண்ணப்பதாரர்களை  தேர்வு செய்துள்ளனர்.  இந்த  தன்னிச்சையான தேர்வு முறையானது  என்சிவிடியின் விதிகளுக்கு எதிரானதாகும்.  எழுத்து  தேர்விற்கு 3  மணிநேரம் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பாணையில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்  எழுத்துத்தேர்வு ஆரம்பிக்கும்போது  வினாத்தாளில் இரண்டரை மணிநேரம்  எனக்குறிப்பிட்டு  முறைகேடுகளில் ஈடுபட்டனர். தேர்வு எழுதிய பல்வேறு  விண்ணப்பதாரரிடம் ஓஎம்ஆர்  ஷீட்டை முழுமையாக பூர்த்தி செய்து வாங்காமல்  காலியாக பெற்றுக்கொண்டு, பின்  உயர்அதிகாரிகள் உதவியுடன் சரியான விடையை  பூர்த்தி செய்து நூற்றுக்கணக்கான  தகுதியற்ற நபர்களை தேர்வுசெய்துள்ளனர். இதன்மூலம், தேர்வுசெய்யப்பட்ட   விண்ணப்பதாரர்களிடமிருந்து, பல்வேறு கோடிகள் உயர்அதிகாரிகளுக்கும்,   அமைச்சர்களுக்கும் கைமாறியுள்ளது. இவ்வாறு மனுவில்   தெரிவித்துள்ளார்.


Tags : JTO ,Tamil Nadu ,government ,ITIs , Tamil Nadu, Government ITI
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...