×

கடந்த ஆண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக அனுமதிக்கப்பட்ட 274 எண்ணெய் கிணறு பணியும் நிறுத்தப்படுமா? டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

திருச்சி: ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், ஏற்கனவே போட்ட பழைய ஒப்பந்தத்தின்படி நடைபெற்று வரும் 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா என விவசாயிகள் ேகள்வி ழுப்பியுள்ளனர். காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு1ல், விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ேரா கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்பட உள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிமீ பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் மட்டுமல்லாமல் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நடந்த அரசு விழாவில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர், விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் இனி டெல்டா மாவட்டங்களில் வராது.
இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தொடங்குவதற்கான அனுமதியை வழங்க மாட்டோம். ஏற்கனவே, நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் பணிக்கு மத்திய அரசுதான் அனுமதி வழங்கி உள்ளது. மாநில அரசு தடையில்லா சான்று வழங்கவில்லை என்றார். முதல்வரின் அறிவிப்புபடி பார்த்தால் ஐஓசி, ஓஎன்ஜிசி, மற்றும் வேதாந்தா இதுதவிர வெளிநாட்டு கம்பெனிகளும் வெளியேறுமா என்பது தெரியவில்லை. இனி அனுமதி தரமாட்டோம் என அவர் கூறியுள்ளதால் இந்த நிறுவனங்கள் ஏலம் எடுத்த 95 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் பணிகள் நடக்குமா அல்லது இவற்றை வெளியேற்றுவார்களா என்பது தெளிவாக இல்லை. இனி புதிதாக அங்கு ஏலம் விட இடமே கிடையாத அளவுக்கு ஏலம் முடிந்து விட்டது. தடையில்லா சான்று வழங்கவில்லை என கூறும் முதல்வர், டெல்டாவில் நடக்கும் பணிகளை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்றும் கேள்வி எழுகிறது.

இதுவரை நாங்கள் யாருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கவில்லை என முதல்வர் கூறிய நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறையினர் எப்படி ஈடுபட்டனர். ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது எப்படி என்ற கேள்விகளும் எழுகிறது.  அதே நேரத்தில் கடலூரில் 50 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கவும், நாகை மாவட்டம் நரிமணத்தில் 27 ஆயிரம் கோடியில் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யவும், தூத்துக்குடியில் ₹40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கவும் திட்டம் உள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி, கடந்த 7ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் ஹல்டி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர், மற்றும் நிறுவனர் தன்னை சந்தித்து கடலூரில் 50 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக ஆலோசித்ததாக டிவிட் செய்து உள்ளார். அதன்பின் 9ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் இன்னும் நம்ப முடியாததாகவே உள்ளது.

இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறகையில், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விட்டு, அதன் ஓரத்தில் கடலூர் பகுதியில் ரூ.50,000 கோடியில் அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதிப்பதும், அதுபற்றி பேச அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றதும் முரண்பாடான செயலாக உள்ளது.  கடலூர் பகுதியில் அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்குவதற்கு தமிழக அரசு  அனுமதி வழங்க கூடாது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன்  திட்டங்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவே  போட்ட பழைய ஒப்பந்தத்தின்படி நடை பெற்று வரும் 274 எண்ணெய் கிணறுகள் பணி  நிறுத்தப்படுவதோடு, பழைய ஒப்பந்தம் ரத்தாகுமா என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : oil well ,Delta Farmers , Hydrocarbon project, oil well, Delta farmers
× RELATED உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு...