×

சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாது; கேரள அரசு அதிரடி அறிவிப்பு

திருவனந்தபுரம்: ‘உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்திய  போதிலும் சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை  ஏற்படுத்த  முடியாது,’ என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி  சுரேந்திரன்  கூறினார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன்  கோயிலை  திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில்,  திருப்பதி, புட்டபர்த்தி, குருவாயூர் உள்பட முக்கிய கோயில்களில் இருப்பது  போல், சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனி சட்டத்துடன் கூடிய ஒரு புதிய  அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று  கடந்த நவம்பரில் கேரள அரசுக்கு உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டது.  கேரள  சட்டசபையில் இது குறித்த  கேள்விக்கு தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி  சுரேந்திரன் நேற்று கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில், திருவிதாங்கூர்  தேவசம் போர்டு  கட்டுப்பாட்டில் உள்ளது. சபரிமலை கோயில் தவிர, 1,250 கோயில்கள்   திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது.

இதில் சபரிமலை கோயில்   உள்பட ஒரு சில கோயில்களில்தான் வருமானம் கிடைக்கிறது. சபரிமலை  ஐயப்பன்  கோயிலை நம்பிதான் நூற்றுக்கணக்கான தேவசம் போர்டு ஊழியர்கள்  உள்ளனர். குறிப்பாக, சபரிமலை  கோயிலை நம்பிதான் மற்ற கோயில்களில் தினமும் பூஜைகள் நடந்து  வருகின்றன.  எனவே, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க வேறொரு அமைப்பை  ஏற்படுத்தினால்,  திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நிலை கேள்விக்குறியாகி விடும்.  சபரிமலை  கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்திய போதிலும், தற்போது அதை ஏற்றுக் கொள்ள முடியாது.  எனவே, புதிய  அமைப்பு எதையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. சபரிமலையில் இந்தாண்டு மண்டல  காலத்தில்  கடந்தாண்டை விட ₹84.34 கோடி அதிக வருமானம் கிடைத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Supreme Court ,Sabarimala temple ,temple , Sabarimalai temple, separate body to manage, Supreme Court, Government of Kerala
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...