×

ககன்யான் திட்டத்தில் அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி துவங்கியது

பெங்களூரு: இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உள்ள விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் நேற்று பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி 12 மாதம் நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து வரும் 2022ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககான்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம், ரஷ்யாவுடன் கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் ரஷ்யாவின் விண்கல சேவை வழங்கும் நிறுவனமான கிளாக்கோஸ்மாஸ் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தில், இந்திய வீரர்களுக்கு விண்வெளி பயிற்சி மற்றும் மருத்துவம் சார்ந்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ரஷ்யாவின் கிளாக்கோஸ்மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இணையதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர்கள் குழு நேற்று பயிற்சியை தொடங்கியது. மாஸ்கோவில் உள்ள ககேரியன் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி சோதனை பயிற்சி மையத்தில் இந்திய விமானப்படை போர் விமானிகள் 4 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 மாதம் நடைபெறும் இந்த பயிற்சியின்போது இந்திய வீரர்களுக்கு வழக்கமான உடல் சார்ந்த பயிற்சியுடன் உயிர் மருத்துவ பயிற்சி மற்றும் விரிவான பயிற்சி அளிக்கப்படும். கூடுதலாக ரஷ்யாவால் ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சோயுஸ் விண்கலம் இயங்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இது தவிர பல்வேறு பருவநிலை மாற்றம் மற்றும் புவியியல் பிரச்னையால் விண்கலம் மாறுபட்ட முறையில் தரையிறங்கினால் அதை எப்படி சரியாக தரையிறக்குவது என்பது குறித்த பயிற்சியும் இந்திய விமானிகளுக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : astronauts ,Russia ,Indian , Gagayan Project, Indian Space, Player, Russia, Training, Launched
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்