×

நாடாளுமன்ற துளிகள்

* காஷ்மீர் செல்வதில் எந்த தடையும் இல்லை
‘ஜம்மு காஷ்மீருக்கு இந்திய பிரதிநிதிகள் குழு சென்று வருவதற்கான அனுமதியை அரசு எப்போது வழங்கும்?’ என மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு இந்திய குடிமகன் செல்ல எந்த தடையும் இல்லை. கடந்த மாதம், 15 பேர் கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு காஷ்மீரை சுற்றிப் பார்த்து வந்தது. அது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு அமைப்பு ஒன்று, காஷ்மீர் நிலவரம் குறித்து சரியான புரிதலைப் பெற வேண்டுமென கேட்டுக் கொண்டதற்காக அரசு ஏற்பாடு செய்து தந்தது. அங்கு வெளிநாட்டு குழு பலதரப்பு மக்களிடம் பேசி, நிலைமையை சுதந்திரமாக கண்காணித்தனர். அக்குழுவில் இடம் பெற்றிருந்த ஐரோப்பிய நாட்டினரும் அரசின் முயற்சிகளை பாராட்டினர்,’’ என்றார்.

* பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘‘சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, இனி எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமருக்கும் அவருடன் அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே தரப்படும். முன்னாள் பிரதமர்கள் பதவி விலகிய 5 ஆண்டுகளுக்கு இந்த பாதுகாப்பு தொடரும். பாதுகாப்பு அச்சுறுத்தலின் அடிப்படையிலேயே பாதுகாப்பு தரப்படும். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். தற்போது, பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பும், 56 விஐபி.க்களுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பும் தரப்படுகிறது,’’ என்றார்.

* என்ஆர்சியில் இடம்பெறாத அசாம் குழந்தைகள் கதி?
அசாமில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இவர்களுக்கான சட்ட வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெற்றோர் பெயர் இப்பட்டியலில் இடம் பெற்று, குழந்தைகள் பெயர் விடுபட்டிருந்தால் அவர்களின் கதி என்ன என்பது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நிதியானந்தா ராய், ‘‘அசாம் என்ஆர்சி பட்டியலில், பெற்றோர் பெயர் இருந்து, குழந்தைகள் பெயர் விடுபட்டிருந்தால் அக்குழந்தைகள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை பிரிக்கப் போவதில்லை என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,’’ என்றார்.

* பரூக் எப்ப வருவாரு?
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அம்மாநில முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மூத்த தலைவரும் மக்களவை எம்பி.யுமான பரூக் அப்துல்லா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், மக்களவையில் நேற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர்பாக கேள்வி நேரத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ‘‘நாடாளுமன்றத்தில் எனது சக எம்பி.யான பரூக் அப்துல்லா எப்போதும் என் அருகிலேயே அமர்ந்திருப்பார். அவர் எப்போது அவைக்கு வருவார்?’’ என கேட்டார். ஆனால் இதை கண்டுகொள்ளாத சபாநாயகர் ஓம் பிர்லா, அரசு தரப்பில் விளக்கம் கேட்காமல் அடுத்த கேள்விக்கு சென்று விட்டார்.

* யாருப்பா அந்த துக்டே துக்டே கும்பல்?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ‘துக்டே துக்டே கும்பல் (சிறு, சிறு கும்பல்) நாட்டை பிளவுபடுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி வருகிறார். அவரது இந்த சொற்கள் பெரும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் ‘துக்டே துக்டே’ கும்பலாக முத்திரை குத்தப்படுகின்றனர். எனவே, யார் இந்த துக்டே கும்பல், எதன் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்படுகிறது, உள்துறை அமைச்சகமோ, மத்திய புலனாய்வு அமைப்புகளோ இதைப் பற்றி ஏதேனும் தகவல்கள் கொடுத்துள்ளதா என காங்கிரஸ் எம்பி.க்கள் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘‘புலனாய்வு அமைப்புகள் தந்த ரகசிய தகவல் அடிப்படையில் துக்டே துக்டே கும்பல் என்ற சொல்லாடல் வந்ததா என்பதை பற்றி எந்த தகவலும் அமைச்சகத்திடம் இல்லை. இதைப் பற்றி அரசும் எந்த தகவலும் கேட்கவில்லை,’’ என்றார்.

Tags : Parliament , Parliament, drops
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...