×

சாக்கடை தூய்மை பணியின்போது மூச்சு திணறலில் 110 பேர் இறப்பு: மக்களவையில் அமைச்சர் பதில்

புதுடெல்லி: சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியின் போது, கடந்த 2015 முதல் இதுவரை 110 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நேற்று முடிந்தது. கடைசி நாளான நேற்று, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே அளித்த பதிலில் கூறியதாவது: கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி, சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் கடந்த 2015ம் ஆண்டில் 57, அதற்கு அடுத்தாண்டு 48, 2017ல் 93, 2018ல் 68 பேர் உயிரிழந்தனர்.

இதில் கடந்தாண்டு உபி.யில் அதிகபட்சமாக 21, மகாராஷ்டிராவில் 17, குஜராத்தில் 16, தமிழகத்தில் 15 உள்பட 110 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளனர். இவர்களில் கடந்தாண்டு இறந்தவர்களில் 44 பேரின் குடும்பத்தினருக்கு முழு இழப்பீடு தொகையும், 21 பேரின் குடும்பத்தினருக்கு பகுதி அளவு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013, டிசம்பர் 6ம் தேதி முதல் 2020 ஜனவரி 31ம் தேதி வரை, மனிதக் கழிவுகளை அகற்றும் 62 ஆயிரத்து 904 ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆரோக்கியமற்ற கழிப்பிடங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை அமர்த்துவதற்கு தடை விதிக்கும் மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு 5ன் கீழ், இதனை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ, ரூ.1 லட்சம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : deaths ,Lok Sabha ,suffocation ,sanitation work ,Minister , Sewerage, Cleaning Work, Breathing, 110 people, Death, Lok Sabha, Minister
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...