×

லாரி மோதி உயிரிழந்த எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு ரூ.22.36 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லாரி மோதி உயிரிழந்த எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு ரூ.22.36 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தவர் ரஞ்சித் (21). இவர் கடந்த 16.11.2017 அன்று வேலையை முடித்துவிட்டு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த லாரி காட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைதொடர்ந்து, ரஞ்சித்தின் இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி அவரது, பெற்றோர் சதாசிவம், கண்ணகி மற்றும் உடன் பிறந்தவர்கள் ரகு, அனுசியா ஆகியோர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி, சிவகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் உயிரிழந்த வாலிபருக்கு வயது 21 என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் வணிக வளாகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து, மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக மனுதாரர் தரப்பில் கூறியுள்ளனர். அவரது இறப்பு பெற்றோருக்கு பெரும் இழப்பாகும். எனவே, அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.22 லட்சத்து 36 ஆயிரத்து 760 இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை வாலிபரின் குடும்பத்தினருக்கு யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


Tags : Electrician , Lorry collides, dies, electrician, family, Rs 22.36 lakh, compensation, court
× RELATED மின்வாரியத்திற்கும் இந்திய மரபுசாரா...