×

பாதாள சாக்கடை அடைப்பால் சாலையோரங்களில் கழிவுநீர் தேக்கம்: நோய் பாதிப்பில் புளியந்தோப்பு மக்கள்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 72வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இச்சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில்  நடைபெற்று வருகிறது. இதனால், கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் தற்போது வரை ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலையின் உள்ளே சென்றால் தனியார் தொழிற்கல்வி நிலையம் வெளியே இரு பக்கமும் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி, சாலையோரம் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.

இந்த கழிவுநீர் ஓடும் சாலையின் அருகிலேயே மழலையர் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வழியாகத்தான் புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்ல வேண்டும். எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் கழிவுநீர் பாதிப்பு பொதுமக்கள் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது. அதிகாரிகளுக்கோ அல்லது மாநகராட்சி ஊழியர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருந்தால்தான் அதை நாங்கள் ஆச்சரியமாக பார்க்க வேண்டும்.

அந்த அளவிற்கு எங்கள் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பது எங்களுக்கு பழகிவிட்டது. நாள்தோறும் கழிவுநீர் நாற்றத்துடனே எழுந்து அந்த நாற்றத்துடனே சாப்பிட்டு அந்த சாக்கடை வழியாகவே அலுவலகத்திற்கு சென்று வர வேண்டியுள்ளது.
இதனால் எங்கள் பகுதியில் பெரும்பாலானோருக்கு அடிக்கடி மர்ம காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டு வாரத்தில் இரண்டு நாள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் செய்தித்தாள்களில் செய்தி வெளி வந்தும் இதுவரை உயர் அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு இந்த வாழ்க்கை பழகி விட்டது” என்றனர்.

Tags : Sewer, roadside, sewage stagnation, disease-prone, lemongrass people
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...