ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கில் திருப்பம் நகை, பணத்துக்காக பாட்டியை பேரன் கொன்றது அம்பலம்: உதவிய சிறுவனுக்கு கூலி ரூ.2 ஆயிரம்

ஆவடி: ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மல்லிகா (56). இவர் தனது கணவரின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 7ம் தேதி வீட்டில் மல்லிகா சடலமாக கிடந்தார். அவரது உடலில் வெட்டுகாயம் காணப்பட்டது. மேலும், அவரது காது, மூக்கில் இருந்த தங்க நகைகள், பீரோவிலிருந்த நகை மற்றும் பணமும் திருடுபோய் இருந்தன. போலீசார் விசாரணையில், மல்லிகாவின் பேரன் சென்னை, கொளத்தூர், ரெட்டேரி, வெங்கட் நகரை சேர்ந்த கோகுல் (19) மற்றும் அவரது கூட்டாளியான சென்னை, அயனாவரம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் மல்லிகாவை கொலை செய்து, நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் தேடிவந்தனர்.

நேற்று காலை தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த கோகுல், சிறுவன் இருவரையும் சுற்றிவளைத்துப்பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட மல்லிகாவிற்கு பத்மா என்ற அக்கா உள்ளார். இவரது மகள் விஜயா கொளத்தூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு கோகுல் என்ற மகனும், ஒரு மகள் உள்ளனர். கோகுல் கூலி வேலை செய்கிறார். இவர் அடிக்கடி பாட்டி மல்லிகாவிடம் வந்து குடும்ப செலவுக்காக பணம் வாங்கிச் செல்வாராம்.

கோகுல் குடும்பத்தினர் வசிக்கும் வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாறவேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. இந்த வீட்டிற்கு அட்வான்ஸ் பணமாக ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டியது இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோகுல் மல்லிகாவை சந்தித்து பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து கோகுலை விரட்டி அனுப்பியுள்ளார். இதனால், பணம் கொடுக்க மறுத்த அவரை கொன்று நகைகளை கொள்ளை அடிக்க முடிவு செய்தார். கடந்த 6ம் தேதி இரவு கோகுல், தனது நண்பரான சிறுவனுடன் பெரம்பூரில் இருந்து மின்சார ரயில் மூலமாக ஆவடி வந்துள்ளார். அங்கிருந்து ஷேர்ஆட்டோவில் கண்ணப்பாளையத்திற்கு இரவு 9.30மணிக்கு வந்தனர்.

இதன்பிறகு, அவர்கள் வீட்டு பின்புறமாக மல்லிகா வீட்டுக்குள் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி நுழைந்தனர். அதன் பிறகு, அங்கிருந்த மல்லிகாவின் வாயை சிறுவன் பொத்தி உள்ளார். கோகுல் அவரது காலை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதில் மல்லிகா பின் பக்க தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன் பிறகு, கோகுல் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது காது, மூக்கில் இருந்த நகைகளை இருவரும் சேர்ந்து அறுத்து எடுத்தனர். மேலும், பீரோவில் இருந்த செயின், மோதிரம், ஜிமிக்கி மற்றும் ரூ.2,500 ஆகியவற்றையும் திருடி உள்ளனர்.

இதன் பிறகு, கோகுல் ரூ.2 ஆயிரம் மட்டும் சிறுவனுக்கு கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் மீண்டும் ஷேர் ஆட்டோவில் ஆவடி ரயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறினர். சிறுவன் திருமுல்லைவாயலில் இறங்கி உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கோகுல் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி கொளத்தூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல் மறைத்து வைத்திருந்த 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.  கோகுல், சிறுவன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>