×

2021 சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினியுடன் கூட்டணியா? ராமதாஸ் பரபரப்பு பேட்டி

சென்னை: பாமக சார்பில், தமிழக மக்கள் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2020-21ம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து, நிருபர்களிடம் கூறியதாவது: பாமக ஒவ்வொரு ஆண்டும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கையின் மையக் கரு, வேளாண்மை, தோட்டக்கலை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் சொல்லியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்போது, வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்காக போராடியவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலைத்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதுதான் இலக்கு. கிராமப்புற சுயஉதவி குழுக்கள் மூலம் ஆடு, நாட்டு கோழி, வான்கோழிகளை வளர்த்து அதை பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் நவீன உணவகங்கள் அமைத்து ஒரே இடத்தில் ருசியாக சமைத்து அனைத்து உணவகங்களுக்கும் வழங்கலாம். இதன்மூலம் பல லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் வேளாண் பணிகளை கவனிக்க 4 அமைச்சகங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் 4 அமைச்சர்களை நியமிப்பது உள்பட 265 யோசனைகளை சொல்லி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி சேரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் தமிழருவி மணியன் கூறியுள்ளாரே என்ற நிருபர்களின் கேள்விக்கு ராமதாஸ் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கியபின் எங்களுடைய கருத்தை சொல்கிறேன். அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் தற்போதைக்கு தொடங்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் என்று நான் சொல்லி இருக்கிறேன். அதற்காக கட்சியினரை கடுமையாக உழைக்க அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Tags : Rajini ,assembly elections ,Alliance ,Ramadas Parabharam ,Ramadoss , 2021 Assembly Election, Actor Rajini, Alliance? Ramadas, Interview
× RELATED சீட் பெல்ட் போடாததால் ரஜினிக்கு ரூ100 அபராதம்