×

முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை குரூப் 1 தேர்ச்சி பெற்றவர்கள் முழு விவரம் வெளியீடு

* பிஇ, பிடெக், படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி
* துணை கலெக்டர் பதவியில் பெண்கள் ஆதிக்கம்

சென்னை: குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலியாக குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முழு விவரத்தையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் பதவிக்கான அதிக இடங்களை பெண்கள் பிடித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது), 2017ம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற  குரூப் 2ஏ தேர்வு ஆகிய 2 தேர்வுகளிலும் இடைத்தரகர் மூலமாக மிகப்பெரிய முறைகேடு நடந்தது  தெரியவந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக விசாரணை நடத்த  சிபிசிஐடியிடம் ஆவணங்களை ஒப்படைத்தது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். முறைகேடு மூலமாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த 2 சம்பவங்களும் கஷ்டப்பட்டு படித்து  டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் நடந்ததாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது  தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முறைகேட்டை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிரடி திட்டங்களை  அமல்படுத்த தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 6 முக்கிய முடிவுகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார்  அறிவித்திருந்தார். அதாவது, தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன், இறுதியாக தேர்வு பெற்ற நபர்கள் அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் அளிப்பது என்பது  கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் அடங்கிய துணை கலெக்டர் 27 பணியிடம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் 90,  வணிக வரித்துறை உதவி ஆணையர்-18. கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர்-13, மாவட்டப் பதிவாளர்-7, ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குநர்-15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்-8,

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட  அலுவலர்-3 இடங்கள் என 181 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்ச்சி அடைந்த 181 பேரின் முழு விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி தற்போது தனது இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரேங்க், மதிப்பெண். ஆணா? பெண்ணா என்ற விவரம். கல்வித்தகுதி என்ன?, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, மெயின் தேர்வு எந்த தேர்வு கூடத்தில் எழுதினார் என்ற விவரம், தேர்ச்சி பெற்றவரின் புகைப்படம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. இதை எல்லாரும் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது போன்று வெளியிடுவது கிடையாது. அதாவது, யாரும் யார் மதிப்பெண்ணையும் பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது இந்த முறை குரூப் 1 தேர்வில் மாற்றப்பட்டுள்ளது.

பெண்கள் ஆதிக்கம்
குரூப் 1 தேர்வில் 27 துணை கலெக்டர் இடங்களில் 21 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 114 பேர் பெண்கள். அது மட்டுமல்லாமல் தேர்ச்சி பெற்றவர்களில் பிஇ, பிடெக், இன்ஜினியரிங் படித்தவர்கள் 127 பேரும், பிஏ படித்தவர் 26 பேரும், பிடிஎஸ் படித்தவர்கள் 3 பேரும், பிஎஸ்எம்எஸ்(சித்த மருத்துவம்) படித்தவர்கள் 3 பேரும் வெற்றி பெற்றனர். பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் கலைக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பெருமளவில் பங்கேற்பது வழக்கம். தற்போது இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர் என்பது குரூப் 1 தேர்வு மூலம் தெரியவந்துள்ளது.

Tags : Competitors ,DNBSC Action to Prevent Abuse Group 1 , Abuse, DNPSC, Group 1 mastery
× RELATED டாடா டெக்னாலஜீஸ் InnoVent 2023: வெற்றியாளர்களை...