×

விடைத்தாளை திருத்தி மோசடி செய்த விவகாரம் எதிரொலி; 6 மாவட்டங்களில் நடக்க இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீர் ரத்து: சென்னையில் மட்டும் நடக்கும் என அறிவிப்பு

சென்னை: விடைத்தாளை திருத்தி மோசடி செய்த விவகாரத்தையடுத்து 6 மாவட்டங்களில் நடப்பதாக இருந்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) காலியாக இருந்த 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான  எழுத்து தேர்வை நடத்தியது. இத்தேர்வை சுமார் 16.30 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சார்ந்தவர்கள். அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் இருக்கும்போது இவர்கள் ஏன் இங்கு வந்து தேர்வு எழுதினர் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், இங்கு ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, விடைத்தாள் கொண்டுவரும் வாகனத்தை நடுவழியில் நிறுத்தி விடைத்தாளில் திருத்தம் செய்து மிகப்பெரிய முறைகேட்டை அரங்கேற்றினர் என்பது தெரியவந்தது. இது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மட்டுமின்றி, கஷ்டப்பட்டு தேர்வு எழுதியவர்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெளி மாவட்டங்களில் தேர்வு நடத்தியதால் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி மையத்துக்கு விடைத்தாள்களை கொண்டுவர அதிகப்பட்சம் 12 மணி நேரம் ஆகிறது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் சம்பவங்களை தடுக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கையை எடுக்க  தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாவட்டங்களில் வருகிற 23ம் தேதி நடைபெற இருந்த கால்நடை மருத்துவத் துறையின் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: கால்நடை மருத்துவ துறையில் 1141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான தேர்வாணைய அறிவிப்பில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு வருகிற 23ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த எழுத்து தேர்வினை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இத்தேர்வுக்கு சென்னை நீங்கலான இதர தேர்வு மையங்களை தேர்வு செய்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு இதுகுறித்த தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : affair ,cancellation ,election , Fraud, DNBSC exam, abrupt cancellation
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு