×

கொடூர அரக்கன் கொரோனா பரவிய ஹூபெய் மாகாணத்தில் எங்கும் மரண பீதி

* பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
* உடல்களை அப்புறப்படுத்துவதில் மர்மம்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய ஹூபெய் மாகாணத்தில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால், இந்த மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் மரண பீதியில் உள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானார் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி சீனாவில் புதிதாக 3,536 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 849 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இவர்களில் 716 பேர் மருத்துவமனை சோதனைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தவிர நேற்று முன்தினம் மட்டும் 108 பேர் சீனாவில் இறந்துள்ளனர். இதில் ஹூபெய் மாகாணத்தில் மட்டும் 103 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாட்டின் பிற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாகாணத்தில் மட்டுமே தினமும் கணிசமான பேர் இறக்கின்றனர். நோயால் இறப்பவர்களின் உடல்கள் எப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வெளியாகவில்லை.

உடல்களை அரசே அழிக்கிறதா அல்லது குடும்பத்தினரிடம் கொடுத்து இறுதிச் சடங்கு செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. அது மர்மமாகவே இருக்கிறது. மேலும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இங்குதான் அதிகளவில் உள்ளது. இந்த மாகாணமே மரண பீதியில் மிதக்கிறது. இது தவிர, பீஜிங், தியான்ஜின், கெய்லோஜியாங்க், ஆங்குய், மற்றும் ஹெனானில் தலா ஒருவர் என 5 ேபரும் நேற்று முன்தினம் இந்த வைரசால் இறந்துள்ளனர். சீனாவில் ஒட்டுமொத்தமாக 4.28 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என கருதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.87 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவை தவிர ஹாங்காங்கில் 42 பேரும், மேகோவில் 10 பேரும்,தைவானில் 18 பேருக்கும் கொரோனா தாக்குதல் இருப்பது உறுதியாகியுள்ளது.

பிலிப்பைன்சில் ஒருவரும் ஹாங்கில் ஒருவரும் இந்த வைரசால் இறந்துள்ளனர். இதையடுத்து சீனாவில் அதிவேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சீனா வந்த அவர்கள், அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கொரோனாவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சீனா சுகாதார அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பீஜிங்கில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்ய சென்றிருந்த அதிபர் ஜி ஜின்பிங்கும் முகமூடி அணிந்திருந்தார். சீனாவில் கொரோனோ பாதிப்பு அதிகம் இருந்தபோதும் இந்த தொற்றுநோயை ஒழிக்கும் பணியில் சீனா வெற்றி ெபற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பயணிகள் கப்பலான டைமண்ட் பிரின்சஸ்சில் 6 தமிழக ஊழியர்கள் உட்பட 138 இந்தியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் தற்போது 160 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், தமிழக ஊழியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அவர்களது குடும் பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே இந்த வைரசுக்கு “கோவிட்-19” என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி யுள்ளது.

ஆரோக்கியமான குழந்தை பெற்ற கொரோனா பெண்
சீனாவில் உள்ள ஷாங்கி மாகாணத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 33 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார். தற்போது தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக ஷியான் நகர மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. சிசேரியன் மூலம் பெற்றெடுத்த இந்த பெண் குழந்தையின் எடை 2 கிலோ 730 கிராம் உள்ளது. முதலில் தாயும், சேயும் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரசவ வார்டுக்கு இருவரும் மாற்றப்பட்டனர். குழந்தைக்கு நடத்திய மருத்துவ சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

அரபு நாடுகளில் இந்தியர் பாதிப்பு
ஐக்கிய அரபு நாட்டின் சுகாதார மற்றும் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஐக்கிய அரபு நாடுகளில் கொரோனோ வைரசால் எட்டாவதாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவை சேர்ந்தவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சீனாவில் இருந்து திரும்புபவர்களிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை பேசினால் அதோ கதிதான்
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிதீவிரமாக உள்ளது. இதனால் உண்மையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக நலன் கொண்டவர்களும், பத்திரிகையாளர்களுக்கும் அரசுக்கு அஞ்சாமல், சமூக வலைதளங்களின் மூலம் உலகத்துக்கு சீனாவில் உள்ள நிலைமையை விளக்க ஆரம்பித்துள்ளனர். இதுபோன்று உண்மை பேசுபவர்கள் உடனடியாக மாயமாவதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது. இதுபோன்று வுகானில் உள்ள நிலைமை குறித்து சமூக வலைதளங்களில் பேசிய பத்திரிகை நிருபர் சென் குஷி இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. கடைசியாக அவர் சமூக வலைதளத்தில் தோன்றி நிலைமை விளக்கிய பின்னர்தான் அவர் காணாமல் போயுள்ளார்.

Tags : Hubei ,panic ,province ,monster corona spread ,corona spread , Corona, Hubei Province, Death Panic
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!